TN LEADERS ON CAA: சிஏஏ சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு - ஒன்று கூடிய தமிழக அரசியல் தலைவர்கள், கடும்எதிர்ப்பு
TN LEADERS ON CAA: மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டதிற்கு, தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
TN LEADERS ON CAA: மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டதிற்கு, தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்:
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டில் அமலுக்கு வந்துள்ளன. இதற்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் சிஏஏ-விற்கு எதிராக தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர். அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பா.ஜ.க.வையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! தக்க பாடம் புகட்டுவார்கள்” என தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு:
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”எதிர்வரும் தேர்தலை கருத்தில்கொண்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில், தேர்தல் ஆதாயத்துக்காக சிஏஏ சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. மக்களை பிளவுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது. இதன் மூலம் மாபெரும் வரலாற்று பிழையை மத்திய அரசு செய்துள்ளது. அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கும் சட்டம் என்கிற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்த சிஏஏ திருத்தச் சட்டத்தை பூர்வ குடிமக்களான இஸ்லாமியர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக அமல்படுத்த நினைத்தால் அதிமுக அதனை ஒருபோதும் அனுமதிக்காது” என வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குடியுரிமை திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பின்போது, அதற்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசை சாடும் திருமாவளவன்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இது மதத்தின் பெயரால் மக்களின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் பெரும் கேடான முயற்சி. தேர்தல் பத்திரங்களின் மூலம் பெற்ற நன்கொடைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாஜகவுக்கு எதிராகவுள்ள நிலையில், அதனைத் திசை திருப்பும் தீங்கான சதிமுயற்சி. வங்கதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சமூகப் பிளவை உருவாக்கி அமைதியைச் சிதைத்து அரசியல் ஆதாயம் தேடும் அற்ப முயற்சி. மோடி அரசின் இத்தகைய சிறுபான்மையின விரோத போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
”ஆதாயம் தேடும் முயற்சி”
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலாக்கத்திற்கு வந்ததாக அறிவிக்கை செய்திருப்பது வேலை வாய்ப்பு, விலைவாசி உயர்வு, வரிச்சுமை, வேலையிழப்பு, கடன் சுமை, சாதிய அடக்குமுறைகள், பெண்கள் மீதான தாக்குதல்கள் போன்ற வாழ்வாதார பிரச்சினைகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பி, மத உணர்ச்சிகளை தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
சீமான் கண்டனம்:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இசுலாமியர்களைத் தனிமைப்படுத்தியும், ஈழத்தமிழர்களைப் புறக்கணித்தும் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதமாக பாஜக அரசு அரசிதழில் வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. வேற்றுமையில் ஒற்றுமை எனும் பன்முகத்தன்மை கோட்பாட்டின் கீழ் கட்டப்பட்டுள்ள இந்தியப் பெருநாட்டை மதரீதியாகப் பிரித்து துண்டாடவே பாஜக அரசின் இக்கொடுஞ்செயல் வழிவகுக்கும்” என தெரிவித்துள்ளார்.
”சிஏஏ ஏற்புடையதல்ல”
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.