ஜெருசலேம் புனித பயணம்.! ரூ.37,000 முதல் ரூ.60,000 வரை- அள்ளிக்கொடுக்கும் அரசு- கடைசி நாள் அறிவிப்பு
ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்களுக்கு மானிய வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைய விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

புனித தலங்களுக்கு பயணம்
தமிழக அரசு பல்வேறு மதத்தினர் தங்களது புனித தலங்களுக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் வகையில் பல்வேறு நிதி உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி, புத்த, சமண, சீக்கிய மதத்தினர் இந்தியாவுக்குள் அவரவர் மத புனித தலங்களங்களான புத்த கயா, அமிர்தசரஸ் செல்ல நபர் ஒருவருக்கு 10,000 ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஆண்டுதோறும் 50 புத்த மதத்தினர், 50 சமணர், 20 சீக்கியர் என 120 பேர் பயனடைவார்கள்.
அடுத்ததாக இந்துக்களுக்கு ராமேஸ்வரம் முதல் காசி வரை இலவச ஆன்மிக பயண திட்டமும் நடைமுறையில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை மூலம் ராமேஸ்வரத்தில் தொடங்கி காசி விஸ்வநாதர் கோயில் வரை 10 நாள் இலவச ரயில் பயணம் திட்டமும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
ஜெருசலேம் புனித பயணம்
இதே போல இஸ்லாமியர்களுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளவும் மத்திய அரசுடன் இணைந்து மானிய உதவி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்லும் வகையில் புனித பயண திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்தவர்கள் நபர் ஒருவருக்கு ரூ.37,000/-வீதமும் 50 கன்னியாஸ்திரிகள் / அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000/- வீதமும் ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 01.11.2025-க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
இதற்கான விண்ணப்பப் படிவத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 28.02.2026-குள் உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரி அனுப்பி வைக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடேதெரிவித்துள்ளார்.





















