Sivashankar Baba: சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு; விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி!
சிவசங்கர் பாபா பாலியல் விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று சிபிசிஐடிக்கு மாற்றபட்ட நிலையில், விசாரணை அதிகாரிகளாக டிஎஸ்பி குணவர்மன் மற்றும் ஆய்வாளர் ஜெய்சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிவசங்கர் பாபா பாலியல் விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்தில் அமைந்துள்ளது தனியார் சர்வதேச உண்டு உறைவிடப்பள்ளி. இந்த பள்ளியை சிவசங்கர் பாபா என்பவர் நிர்வகித்து வருகிறார். இவர் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பள்ளியில் பயின்று வெளியேறி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும், அந்த மாணவிகள் சிவங்கர் பாபாதான் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரம் என்று கூறிக்கொண்டும், பள்ளியில் படிக்கும் மாணவிகள் பலரையும் கோபிகைகள் என்று மூளைச்சலவை செய்து அவர்களுடன் உறவில் ஈடுபட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
காஞ்சிபுரத்தை கலர்புரமாக மாற்றிய வானவில்!
இதையடுத்து, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் சமூக வலைதளங்களில் வலுவாக குரல் கொடுக்கத் தொடங்கினர். குற்றம்சாட்டிய மாணவிகள் இருவரும் அங்கிருந்து தப்பித்து வந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து, தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய அதிகாரி சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், மாணவிகள் அளித்த பாலியல் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருந்ததால் கடந்த 11-ஆம் தேதி பாபாவை நேரில் ஆஜராகும்படி ஆணையம் உத்தரவிட்டு இருந்தனர். இந்நிலையில் சிவசங்கர் பாபா தான் உத்தரகாண்ட் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் தன்னால் ஆஜராக முடியாது என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீதும் மகாபலிபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் 354, 355, 363, 365 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மொத்தம் 15 புகார்கள் வந்ததாகவும் அதில் ஐந்து புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிவசங்கர் பாபாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருப்பதால் சிபிசிஐடிக்கு இந்த விசாரணை மாற்றப்படும் பட்சத்தில் எளிதாகக் வேறு மாநிலங்களுக்குச் சென்று விசாரணை நடத்தவும் கைது செய்யவும் எளிதாக இருக்கும்.. இந்த காரணத்தினால் தான் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகளாக DSP குணவர்மன் மற்றும் ஆய்வாளர் ஜெய்சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள், பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் முதற்கட்ட விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
World Blood Donor Day 2021: இன்று உலக ரத்த தான தினம் - வதந்திகள் vs உண்மைகள் மருத்துவர் விளக்கம்!