World Blood Donor Day 2021: இன்று உலக ரத்த தான தினம் - வதந்திகள் vs உண்மைகள் மருத்துவர் விளக்கம்!
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை நாட்களுக்கு பின் ரத்த தானம் வழங்கலாம் ? குழந்தைகளுக்கு தாய் பாலூட்டலாமா ? உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள் இதோ!
இன்று உலகம் முழுவதும் ரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ரத்தம் சார்ந்த பல்வேறு விதமான வதந்திகள், தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அவற்றில் எது உண்மை, எவையெல்லாம் வதந்திகள் - விளக்குகிறார் ரத்த மருத்துவ நிபுணர் தமிழ்மணி திருநாராயணன்.
1) பெருந்தொற்று காலத்தில் ரத்த தானம் செய்ய முன்பு போல் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்களா ?
ரத்த தானம் செய்பவர் அனைவருக்கும் நன்றி. கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது ஆனாலும் இதுவரை ரத்தம் இல்லை என்ற நிலை ஒருமுறை கூட வரவில்லை. 18-40 வயது வரை அதிகமாக ரத்த தானம் செய்கிறார்கள். ஆனாலும் தினசரி 10 முதல் 15 நபர்கள் அனைத்து ரத்த வங்கிகளிலும் ரத்ததானம் செய்து கொண்டிருக்கிறார்கள். கலெக்ஷன் குறைவாக இருக்கலாம் ஆனால் தேவையான அளவு இருக்கிறது.
2) குறிப்பிட்ட இரத்த பிரிவை கொரோன அதிக அளவில் தாக்கும் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன, அது உண்மையா ?
சில பேப்பரில் கூட வந்தது, ஏ குரூப் பொருத்தவரை அதிகமாக பாதிப்பாகும், ஓ குரூப் பொருத்தவரை பாதிப்பே இல்லை என்று, ஆனால் அப்படி எல்லாம் இல்லை. அனைத்து ரத்தப் பிரிவினருக்குமே பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது, அதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது ஆனால் இன்னும் முடிவு வரவில்லை.
3) ரத்தத்தில் புரோட்டின் அதிகமாக இருந்தால் அவர்கள் அதிகமாக பாதிப்படைவார்கள் என சொல்லப்படுவது உண்மையா ?
ரத்தத்தில் மொத்தம் நான்கு கூறுகள் உள்ளன, அதில் முதலாவது தான் பிளாஸ்மா என சொல்லப்படுவது. இந்தப் பிளாஸ்மாவில் தான் புரோட்டின் இடம்பெற்றிருக்கும். இதுவும் ஒரு வகையான வதந்திதான்.
4) ரத்த தானம் பெற கொடையாளிகளை எவ்வாறு தேர்வு செய்வீர்கள்?
18 முதல் 65 வயது வரை உள்ள அனைவருமே ரத்ததானம் செய்யலாம், அவர்களுக்கு ரத்த சோகை என்பது இருக்கக் கூடாது. மேலும் ஹீமோகுளோபின் லெவல் 12.5 ஆக இருக்க வேண்டும். வருடத்திற்கு நான்கு முறை ரத்த தானம் கொடுக்கலாம். சாதாரண நோயாளிகளுக்கு எப்படி ரத்தம் பெறுவோமோ அதே மாதிரிதான் கொரோன நோயாளிகளுக்கும் ரத்தம் பெறப்படும். ரத்தம் சார்ந்த நோய் இருப்பவர்கள், சர்க்கரை நோய் இருப்பவர்கள், இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள் ரத்த தானம் கொடுக்க கூடாது.
5) கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை நாட்களுக்கு பிறகு ரத்த தானம் செய்யலாம்?
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலுமாக நலம் பெற்று பின்பு ஒரு மாத காலத்தில் ரத்த தானம் செய்யலாம். ஒருவேளை நீங்கள் கொரோனா பாதிப்புக்கு பின் சோர்வாக உணர்ந்தால் மட்டும் கொடுக்க வேண்டாம் என முடிவு செய்யுங்கள், இல்லையெனில் தாராளமாக நான்கு வாரங்களில் ரத்த தானம் செய்யலாம்.
6) தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் எப்போது ரத்த தானம் செய்யலாம்?
தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின் 14 நாட்கள் கழித்து ரத்த தானம் செய்யலாம்.
7) கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் எந்த மாதிரியான மாறுதல்கள் இருக்கும் ?
பசியின்மை, வாசனை மற்றும் ருசி ஆகியவை தெரியாது என்பதால் உணவு எடுத்துக்கொள்வது குறைந்துவிடும். இதனால் சோர்வாகவும் சிலருக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவதற்கு வாய்ப்புண்டு. அவர்கள் புரோட்டின் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
8) கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட தாய் குழந்தைக்கு பால் ஊட்டலாமா?
பாலூட்டும் தாய், குழந்தைக்கு மாஸ்க் அணிந்து உரிய பாதுகாப்புடன் பாலூட்டலாம். தாய் பால் ஊட்டுவதால் குழந்தைக்கு கொரோனா நோய் பரவாது. மேலும் பாலூட்டும் தாய்மார் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று தற்போது சொல்லப்பட்டுள்ளது. தாய்மை அடைந்துள்ள பெண்மணி தடுப்பூசி செலுத்தி கொள்வது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
9) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்த செல்கள் குறையுமா, என்ன மாதிரியான ஆரோக்கியம் நிறைந்த உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் ?
முட்டை எடுத்துக்கொள்வது, எலுமிச்சை பழ சாறு நிச்சயம் தேவைப்படும், நிலக்கடலை மற்றும் மூக்குகடலை போன்ற சமச்சீரான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவுப் பழக்கத்தால் மட்டுமே உடலில் சோர்வு ஏற்படலாம் மற்றபடி நோயால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
10) கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த கட்டு ஏற்படுகிறதா, இது ஒரு முக்கியமான பாதிப்பாக கூறப்படுகிறதே?
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சில மருந்துகள் எடுத்துக் கொள்வார்கள், மேலும் சிலருக்கு ஸ்டீராய்ட் தேவைப்படும். இப்படி சிலருக்கு இந்த மருந்துகள் எடுத்துக் கொள்ளப்படும் போது ரத்தக்கட்டு ஏற்படுகிறது. ஆனால் பெரும்பாலும் இணை நோய் இருப்பவர்களுக்கே ஏற்படுகிறது. அதனால் ரத்தக்கட்டு ஏற்படாமல் இருப்பதற்கான சிகிச்சைகளையும் தொடக்கத்திலேயே மருத்துவர்கள் தற்போது வழங்க தொடங்கி விட்டார்கள். மிக சில நபருக்கு மட்டுமே இதுபோன்ற நடக்கிறது.
11) வீட்டில் இருங்கள் வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள் என்று அறிவுறுத்தப்படும் பெருந்தோற்று காலத்தில், ரத்த தானம் செய்ய விரும்புபவர்களுக்கு என்ன நடைமுறை ?
ஊரடங்கு காலத்தில் ரத்ததானம் செய்ய வருவது சற்று சிரமம் தான் ஆனால் அவர்கள் வந்து செல்வதற்கான ஏற்பாடு காவல்துறையிடம் அனுமதி வாங்கித் தருவது போன்ற அனைத்தையும் நாங்கள் செய்து வருகிறோம்.
12) மிக அரிதான ரத்த வகைகளை பெறுவதில் என்ன மாதிரியான சிக்கல்கள் உள்ளன?
பாம்பே ஓ குரூப் என ஒரு ரத்த வகை உண்டு அது மிகவும் அரிதானது, அந்த ரத்தம் இருப்பவர்களுக்கு வேறு எந்த ரத்தமும் கொடுக்க முடியாது. அதனால் பாம்பே ஓ குரூப் போன்ற அரிதான ரத்த வகை இருப்பவர்கள் நிச்சயம் ரத்த தானம் செய்ய வேண்டும் அதனால் அவர்களுக்கு தெரியாமலேயே ஒரு உயிரை காப்பாற்றும் உன்னதமான கடமையை அவர்கள் செய்திருப்பார்கள்.
13) ரத்தம் தேவைப்படுபவர்கள் எவ்வாறு ரத்த வங்கியை அணுகலாம் ?
Tamilnadu aids control board என இணையத்தில் வலைப்பக்கம் உள்ளது, அதிலிருந்து தொலைப்பேசி எண்களை எடுத்து கொள்ளலாம். மேலும் blood safety என தனி அமைப்பும் உள்ளது, அவர்களின் எண்ணை தொடர்பு கொண்டு கேட்கலாம், அனைத்து அரசு மருத்துவமனைகளையும் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
இந்தியாவிலேயே ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு மிகுந்த முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )