‘செங்கல்பட்டில் 300 கோடியில் பிரம்மாண்ட பூங்கா’ எங்கு அமைகிறது? சிறப்பம்சங்கள் என்னென்ன..?
செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் 138 ஏக்கர் பரப்பளவில், சுமார் 300 கோடி ரூபாய் செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது

பூமி ஒரு அதிசயமான கிரகம், பூமியில் மட்டுமே பல கோடி கணக்கான உயிரினங்கள் வளர்ந்து வருகின்றன. பல கோடிக்கணக்கான உயிரினங்களுக்கு ஆக்சிஜனை உருவாக்கிக் கொடுப்பது தாவரங்கள்தான். இயற்கை கொடுத்த பொக்கிஷம் தாவரங்கள் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு தாவரத்திற்கும் ஒவ்வொரு தன்மை இருக்கிறது. ஒவ்வொரு மரத்திற்கும் என்றும் ஒவ்வொரு தன்மை என்பது இருக்க செய்கிறது.
குறிப்பாக நிலங்களின் தன்மையை பொறுத்துதான், தாவரங்கள் மற்றும் மரங்கள் வளர்கின்றன. நிலங்களை ஐந்து வகையாக பிரித்துள்ளனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என ஐந்து வகையாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு நிறத்திற்கும் ஏற்ப, தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு மரங்கள் மற்றும் தாவரங்கள் வளர்கின்றன. ஒரு இடத்தில் காணப்படும் தாவரம், வேறு நில வகைகளில் காணப்படாது.ஒரு சில மரங்கள் ஒரு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வளரும்.
தமிழக அரசு திட்டம்
எனவே மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு பயன்பெறும் வகையில் ஐந்து வகை நிலங்களிலும் காணப்படும் தாவரங்களை ஒரே இடத்தில் வளர்த்து காட்சிப்படுத்துவதற்காக தமிழக அரசு திட்டம் தீட்டியது. இதனைத் தொடர்ந்து இந்த வகை தாவர பூங்காக்களில் உருவாக்குவதற்கு, வனத்துறையிடம் அதற்கான பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள கடம்பூரில் 138 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட உள்ளது.
கடம்பூர் தாவரவியல் பூங்கா சிறப்பம்சம் என்ன?
செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் 138 ஏக்கர் பரப்பளவில், சுமார் 300 கோடி ரூபாய் செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்திருந்தது. இங்கிலாந்து கியூ நகரில் உள்ள பூங்காவை போல் கடம்பூர் தாவர பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது
இதற்காக இங்கிலாந்தில் உள்ள கியூ ராயல் பொட்டானிக் கார்டன்ஸ் நிர்வாகத்துடன் கடந்த 2023 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தாவரவியல் பூங்கா எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு அதற்கான டித்த பணிகள் தயாரிக்கப்பட்டன. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தற்போது இறுதி கட்டத்தை அடைந்திருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாவரவியல் பூங்காவில் பூர்வீக இனத்தோட்டம், மூலிகை தோட்டம், பல சூழல் மற்றும் காலநிலையில் உள்ள அடையாளமாக கருதப்படும் தாவரம், மூங்கில் தோட்டம், ரோஜா உள்ளிட்ட மலர்கள் தோட்டம், ஜப்பானிய தோட்டம் என பல வகையான தோட்டங்கள் அமைய உள்ளன . குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த ஐந்து வகை நிலங்களை சார்ந்த நிலப்பரப்பும் உருவாக்கப்பட்டு. அந்தந்த பகுதிகளுக்கான தாவரங்களையும் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















