Mylswamy Annadurai: நாள்தோறும் செயற்கைக்கோள்களை ஏவும் நிலை வரும் - மயில்சாமி அண்ணாதுரை பேச்சு
இனி தினசரி செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் நிலை வரும் என சந்திரயான் 1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இந்தியா விண்வெளி துறையில் சிறந்து விளங்குகிறது. வரும் காலங்களில் தினசரி விண்ணில் ராக்கெட் ஏவும் நிலை வரும் என சந்திரயான் 1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் அரையாண்டு பொதுக்குழு மற்றும் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சந்திரயான்-1 திட்ட இயக்குனரும், விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “இந்தியாவில் பல ஆண்டுகளுக்கும் முன் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் எளிமையான முறையில் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி படிப்படியாக முன்னேறி இன்று உலக அளவில் முன்னிலையில் இருக்கும் 3 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. நிலவுக்கு இதுவரை 3 செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது இந்தியா. நிலவின் மேல் உள்ள கனிமங்களை அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி அடுத்த 10 ஆண்டுகளில் நிலவில் இருந்து கனிமங்களை புமிக்கு கொண்டு வரும் பணிகளும் நடைபெறும். முன்பு ஒரு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த அதிக செலவு செய்யப்பட்டது. இன்று அந்த நிலை மாறி குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறோம். அந்த அளவுற்கு இந்தியா விண்வெளி துறையில் முன்னேறியுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் 2021 ஆம் ஆண்டு 1,200 செயற்கைக்கோள்களும், 2022 ஆம் ஆண்டு 2,300 செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தற்போது வரை 3 ஆயிரம் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
இப்படி தொடர்ந்தால் விரைவில் தினசரி செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் நிலை ஏற்படும். குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதில் இந்தியாவுக்கும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் –ற்கும் போட்டி நிலவுகிறது. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸை விட குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த குலசேகரப்பட்டினத்தில் அமைய இருக்கும் இஸ்ரோவின் ஏவுதளம் உதவும்” என குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரோ தமிழ்நாட்டில் இரண்டாவது தளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்தபடியாக தூதுக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ஏவுதளம் அமைக்க திட்டமிட்டுள்ளது. பல்வேறு ஆய்வு பணிகளுக்கு பின் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 2,300 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏவுதளம் அமையவுள்ள நிலையில், இதற்குத் தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளில் 99% முடிந்துவிட்டதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கையகப்படுத்த நிலமும் இப்போது இஸ்ரோ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டவில் இருந்து பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்ற ராக்கெட்டுகள் ஏவப்படும் நிலையில் குலசேகரப்பட்டினத்தில் அமைய இருக்கும் ஏவுதளத்தில் முதலில் சிறிய வகை ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் ஏவுதளத்திற்கான பணிகள் நிறைவடைய இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எத்தனையோ இடங்கள் இருந்தும் ஏன் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அதாவது குலசேகரப்பட்டினத்திற்கு அண்டார்டிக்காவிற்கும் இடையே எந்த ஒரு நிலமும் கிடையாது. மேலும் பூமத்திய ரேகைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் இடம் என்பதால் நமக்கு எரிபொருள் செலவு குறையும். இதன் காரணமாகவே குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.