5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்ததன் காரணமாக தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை உட்பட தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இரண்டு தினங்களாக மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடனையே காணப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்ததன் காரணமாக கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திண்டுக்கல், ஈரோடு, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. திருப்பூர், விருதுநகர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
— Tamilnadu Vaanilai(தமிழ்நாடு வானிலை) (@ChennaiRmc) July 10, 2021
ஜூலை 13ஆம் தேதி வரை தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். இதேபோல், ஜூலை 14ஆம் தேதி வரை கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக களியலில் 11 செ.மீ., குழித்துறையில் 10 செ.மீ., கன்னியாகுமரியில் 9 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், மேற்கு தொடர்ந்து மலையை ஒட்டியுள்ள பகுதிகள், தென் தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. அதே போல் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
— Tamilnadu Vaanilai(தமிழ்நாடு வானிலை) (@ChennaiRmc) July 10, 2021
முன்னதாக, அரபிக் கடல் பகுதியில் தென்மேற்கு பருவ காற்று வலுவடைவதன் காரணமாக, மேற்கு கடலோர பகுதியில் ஜூலை 9ஆம் தேதி முதல், மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், கொங்கன் மற்றும் கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் மாஹே கடலோர பகுதிகளில் ஜூலை 9ஆம் தேதி முதல் பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.