தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதத்தில் 18.36 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும் - மத்திய அரசு
தமிழ்நாட்டில் ஜூன் மாதத்தில் 18.36 லட்சம் தடுப்பூசிகள் விலையில்லாமல் வழங்கப்படும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கொரோனா பரவலில் இருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள, தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத்திலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டி அளித்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தின் கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளது என்றும், மத்திய அரசிடம் இருந்து லட்சக்கணக்கான தடுப்பூசிகள் வரவேண்டி உள்ளதாகவும் கூறினார். மேலும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும், தடுப்பூசிகள் வர வேண்டி இருப்பதால் மாநிலம் முழுவதும் ஜூன் 3 முதல் 6-ந் தேதி வரை தடுப்பூசிகள் செலுத்தும் பணி நிறுத்தப்படும் என்றும் கூறினார்.
இந்த நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்திற்கு கடந்த ஜூன் 2-ந் தேதி வரையில் மட்டும் ஒரு கோடிககும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், வரும் 15ந் தேதி முதல் 30-ந் தேதி வரையில் 18.36 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு விலையில்லாமல் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், தமிழக அரசிடம் 7.24 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்படாமல் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
2021 ஜூன் 2 ஆம் தேதி வரை ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai) June 3, 2021
18.36 லட்சம் தடுப்பூசிகள் 2021 ஜூன் 15 - 30 ஆம் தேதி வரையிலான காலத்தில் தமிழகத்திற்கு விலையில்லாமல் வழங்கப்பட உள்ளன. @mkstalin @Subramanian_ma pic.twitter.com/kQ8kfIxbAL
தமிழ்நாட்டில் தடுப்பூசிகள் தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்துவதற்காக மாநில அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல். தடுப்பூசி ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அந்த ஆலையில், உடனடியாக தடுப்பூசி தயாரிக்கும் பணியை தொடங்க வேண்டும் என்றும் மத்திய அரசை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தடுப்பூசிகள் தயாரிப்பு குறித்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பாரத் பயோடெக் நிறுவனத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.