ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
Tamil Nadu Cauvery Water Issue: காவிரி நீரை சேமிப்பதில் தமிழ்நாட்டில் என்ன சிக்கல், அதற்கான தீர்வுகள் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்ககம் தலைவர் சேதுராமன் ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த சூழலில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர் சேதுராமன் இந்த பிரச்சினை குறித்து நமது ஏபிபி நாடு-க்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
அணை கட்டாதது ஏன்?
"காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டில் மேலும் அணைகள் கட்டுவது என்பது பூகோள ரீதியாக வாய்ப்பு கிடையாது. அனைத்துமே சம வெளிப்பகுதியில்தான் உள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்டதே இரண்டு மலைகளுக்கு நடுவில்தான் கட்டப்பட்டுள்ளது. அந்த நீர்த்தேக்க பகுதி என்பது பல ஏக்கர் பகுதிகளை ஆக்கிரமிக்கும். அதுபோல சூழல் என்பது தமிழ்நாட்டில் காவிரி பாயக்கூடிய மாவட்டங்களில் எங்கும் பூகோள ரீதியாக இல்லை.
காவிரியில் இருந்து சில நேரங்களில் வீணாக கடலில் 300 டிஎம்சி வரை கலந்துள்ளது. அனைத்து காலகட்டங்களிலும் இதுபோன்று ஆவது கிடையாது. எப்போது எல்லாம் உபரியாக, தட்பவெப்பநிலை மாற்றம் காரணமாக மழை அதிகளவில் பெய்தால் அப்படி நடக்கும்.

நமக்கு ஜுலை 29ம் தேதி 3 ஆயிரத்து 500 கன அடி நீர் திறக்கச் சொன்னார்கள். ஆனால், 30, 31 கனமழை காரணமாக 25 ஆயிரம் கன அடி நீர் வரை திறக்கிறார்கள். மேகவெடிப்பு போன்ற குறுகிய காலகட்டத்தில் பெய்யும் மழை நீரை நாம் ஆற்றில் விடுவது தவிர வேறு வழியில்லை.
கடலுக்கு நீர் செல்லுதல் அவசியம்:
பொலவரம் அணை கட்டியிருக்கிறார்கள். அதில் 1 லட்சத்து 60 ஆயிரம் கன அடி நீர் போகும் அளவில் கட்டியிருக்கிறார்கள். நீங்கள் எத்தனை அணைகள் கட்டினாலும் ஒரே நேரத்தில் வரும் தண்ணீரை சேகரிக்க முடியாது. மற்றொரு முக்கியமான விஷயம் கடலுக்கு நீர் செல்லுதல். கடலுக்கு நீர் போக வேண்டியது மிக மிக அவசியம்.
உச்சநீதிமன்ற தீர்ப்பிலே கடலுக்கு 10 டிஎம்சி வரை தண்ணீர் சென்று சேருவதற்கும், கடலில் வாழும் உயிரினங்களுக்கு அது தேவை என்று சொல்லப்படுகிறது. தென்மேற்கு பருவமழை அதிகமாக பொழிந்து, மேட்டூர் அணை நிரம்பி, வடகிழக்கு பருவமழை அதிகளவில் பொழிந்தால் இங்கு தண்ணீரே திறக்கமாட்டார்கள். அதுபோன்ற நேரத்தில் உபரியாக வரும் நீரை கொள்ளிடத்தில் திறந்து விடுவார்கள்.
அதுபோன்ற நேரங்களில் மட்டும்தான் திறப்பார்களே தவிர. சாதாரணமாக தண்ணீரை வீணடிப்பது கிடையாது. கர்நாடகாவில் உள்ள 4 அணைகள் நிரம்பினால் மட்டும்தான் நமக்கு தண்ணீரே திறந்து விடுகிறார்கள். உபரி நீர்தான் மேட்டூருக்கு வருகிறது. மேட்டூர் அணை கட்டப்பட்டு 94 ஆண்டுகள் ஆகிறது. இந்த 94 ஆண்டுகளில் இதுபோன்ற சம்பவம் என்பது 15 முதல் 20 வருடங்கள்தான் நிகழ்ந்துள்ளது.
பற்றாக்குறை நதி:
மற்ற வருடங்களில் நமக்கு பற்றாக்குறை நீராகவே உள்ளது. காவிரி என்பது பற்றாக்குறை நதியாகவே உள்ளது. அதனுடைய தேவை என்பது தமிழ்நாடு, கர்நாடகத்திற்கு சுமார் 1240 டிஎம்சி தேவை. ஆனால், 740 டிஎம்சிக்கு-தான் நடுவர் மன்றமே நமக்கு அளித்துள்ளனர். இதுதான் இன்றைய காலகட்டத்தில் சாத்தியமாக உள்ளது. இந்த 740 டிஎம்சி தண்ணீரும் குறையும்போதுதான் தமிழ்நாட்டில் காவிரி நீரைத் தடுக்க ஏன் அதிக அணைகள் கட்டப்படவில்லை என்ற கேள்விகளை திசை திருப்பும் முயற்சியாகத்தான் பார்க்கிறேன்.

கர்நாடக முதல்வர் ஏன் அந்த தண்ணீரை கடலில் விடுகிறீர்கள்? என்று கேட்கிறார். இது திசை திருப்பும் முயற்சி. நமக்கு நடுவர் மன்றத்தில் மிகத் தெளிவான தீர்ப்பு அளித்துள்ளனர். 192 டிஎம்சி இருந்தது. உச்சநீதிமன்றம் நமது நிலத்தடி நீரை காரணமாக காட்டி அதை 177.25 டிஎம்சியாக குறைத்தது. தமிழ்நாட்டில் 20 டிஎம்சி தண்ணீர் உள்ளது. அதனால், 14.75 டிஎம்சியை நம்மிடம் இருந்து குறைக்கப்பட்டது.
தற்போது இதையும் குறைப்பதற்கான வேலையை அவர்கள் பார்க்கிறார்களேதான் தவிர, நமக்கு கொடுப்பதற்கான அளவை அவர்கள் கொடுக்கவில்லை. இடைக்கால தீர்ப்பு 97ம் ஆண்டு கொடுத்தது 205 டிஎம்சி. அதற்கு முன்பாக 300 டிஎம்சி வரை நமக்கு வந்து கொண்டு இருந்தது. ஆனால், பற்றாக்குறை நதியாக இங்கு ஓடிக்கொண்டிருக்கும்போது இதை காரணமாக காட்டி திசை திருப்பும் முயற்சியாக உள்ளது. அவர்களே எப்போது திறந்து விடுகிறார்கள்? உபரியான பிறகுதானே திறந்து விடுகிறார்கள். உபரி நீர் நமக்கு கடலுக்குச் செல்வது போல அவர்கள் நமக்கு திறந்து விடுகிறார்கள்.
வீணாகும் நீரைச் சேமிப்பதற்கு தீர்வு என்ன?
அதேசமயம், நாம் காவிரி நீரை சேமிப்பதற்கு தடுப்பணைகள் கட்டுவதற்கு பதிலாக தடுப்பணைகள் போல கட்டலாம். மாயனூரில் இருப்பது போல கொள்ளிடத்தில் கதவணைகள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. அதை கொஞ்சம் ஆய்வு செய்தால் அதிகபட்சமாக 1 அல்லது 2 டிஎம்சி தண்ணீர் சேமிக்கலாம்.

கொள்ளிடத்தில் இருந்துதான் 25 மாவட்டங்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் சென்று கொண்டிருக்கிறது. நிலத்தடி நீர் பற்றாக்குறையாக உள்ள இடங்களுக்கு மக்களுக்கான குடிநீர் கூட்டுக்குடிநீர் மூலமாகத்தான் செல்கிறது. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் சேகரிக்கப்பட்டால் நிலத்தடி நீர் ஆதாரத்தை அதிகரிக்கும். சில இடங்களில் கதவணைகள் கட்டுவதற்கான பணிகள் நடக்கிறது. இது போதுமானதாக இல்லை. இன்னும் அதிக இடங்களில் செய்ய வேண்டும். ஆனால், இப்படி சேகரிக்கும் நீர் விவசாயத்திற்கு பயன்படாது. ஆனால், கொள்ளிடத்தில் சேகரிக்கப்படும் நீர் என்பது மிக குறைந்த அளவிலான நீரே ஆகும்.
கடைமடைக்கு தண்ணீர் செல்லாதது ஏன்?
பொதுவாக, ஒவ்வொரு அரசுகளும் தூர்வாரும் பணிகளுக்கு குறிப்பிட்ட நிதியை மட்டும்தான் உருவாக்குவார்கள். அதில் உள்ள சிரமங்களை புரிந்து கொள்ள முடிகிறது. காவிரி பாசனப்பகுதியில் 30 ஆயிரம் கிலோமீட்டர் வரையில் கால்வாய்கள் உள்ளது. 4 வகையான கால்வாய்கள் உள்ளது. ஆற்றில் இருந்து பிரிந்து வயல்களுக்குச் செல்லும் கால்வாய்களை அதன் தன்மைக்கு ஏற்ப ஏ, பி, சி மற்றும டி என பிரிப்போம்.
30 ஆயிரம் மொத்த நீளமுள்ள இந்த கால்வாயை ஒரே நேரத்தில் தூர்வாருதல் என்பது சாத்தியமில்லாத ஒன்று. தூர்வாரும் பணிகளை நாம் செய்ய வேண்டும் என்பது ஒரு பக்கம். மற்றொரு பக்கம் ஆக்கிரமிப்புகள். தமிழ்நாடு நகரமயமாக்கல் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால், வயல்வெளிகளுக்கு அருகில் வீடுகள் உருவாக்குகிறார்கள். நகரங்கள் விரிவாக்கம் செய்யப்படும்போது வயல்வெளியில்தான் வீடுகள் அமைகிறது.

அப்படி போகும்போது ஆங்காங்கே பாசன வாய்க்கால்கள், வடிகால் வாய்க்கால்கள் வீடுகள் உள்ளிட்டவை மூலமாக ஆக்கிரமிக்கப்படுகிறது. இதனால் போகாமல் உள்ளது. கடந்தாண்டே ஜுன் 12ம் தேதி அணை திறக்கப்பட்டது. டெல்டாவில் தோராயமாக இரண்டரை முதல் 3 லட்சம் ஏக்கர் வரை தான் குறுவை சாகுபடி நடக்கும். கடந்தாண்டு 6 லட்சம் ஏக்கர் வரை குறுவை சாகுபடி நடந்தது.
தண்ணீர் அதிகமாக வரும்போது கடைமடைக்கு தண்ணீர் எளிமையாக சென்றுவிடும். எப்போது எல்லாம் பற்றாக்குறை ஏற்படுகிறதோ, அப்போதுதான் கடைமடைக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. நீர் வரத்து சீராகவோ, அதிகமாகவோ இருந்தால் இந்த பிரச்சினை கிடையாது. குறைந்த நீரை பராமரிக்க தூர்வாரும் பணிகளை நாம் முறையாக செய்ய வேண்டும்."
இவ்வாறு அவர் பேசினார்.
Before You Go
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















