EPS on CM Stalin: பள்ளியில் சாதி மோதல்; மேடையில் சமூக நீதி! திமுக ஆட்சியில் இதுதான் தொடர்கதை! - இபிஎஸ் விளாசல்
சமத்துவம் பேணும் கல்வியின் உறைவிடமாம் பள்ளிகளில் ஜாதி, மதம் உள்ளிட்ட பிரிவினைவாதத்திற்கு என்றும் இடமில்லை என்பதை உறுதிசெய்யவேண்டியது அரசின் கடமை என ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் ஜாதி ரீதியான மோதல்கள் நடப்பது தொடர் கதையாகியுள்ள நிலையில், பள்ளிகளிலேயே இதுபோன்ற சம்பவம் நிகழ்வது கவலையளிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மருதகுளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சாதி மோதல்
நெல்லை மாவட்டம் நாகர்கோவில் செல்லும் சாலையில் பொன்னாக்குடி அடுத்த மருதகுளம் கிராமத்தில் இங்கு அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இந்தப் பள்ளியில் பொன்னாக்குடி, மருதகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் 12ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் படிக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தரப்பு மாணவர்களை மற்றொரு தரப்பு மாணவர்கள் தாக்கியதாகத் தெரிகிறது.
இதில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர் கதையாகும் ஜாதி ரீதியான மோதல்கள்
இந்த நிலையில், திமுக ஆட்சியில் ஜாதி ரீதியான மோதல்கள் நடப்பது தொடர் கதையாகியுள்ள நிலையில், பள்ளிகளிலேயே இதுபோன்ற சம்பவம் நிகழ்வது கவலையளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகள்:
’’திருநெல்வேலியில் அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியான பிரச்சனையால் நேற்று ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகேட்டு அதிர்ச்சியுற்றேன்.
சமூகநீதி என்று மேடையில் மட்டும் பேசும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் ஜாதி ரீதியான மோதல்கள் நடப்பது தொடர் கதையாகியுள்ள நிலையில், பள்ளிகளிலேயே இதுபோன்ற சம்பவம் நிகழ்வது கவலையளிக்கிறது.
பள்ளிகளில் பிரிவினைவாதத்திற்கு என்றும் இடமில்லை
சமத்துவம் பேணும் கல்வியின் உறைவிடமாம் பள்ளிகளில் ஜாதி, மதம் உள்ளிட்ட பிரிவினைவாதத்திற்கு என்றும் இடமில்லை என்பதை உறுதிசெய்யவேண்டியது அரசின் கடமை.
எனவே, வெற்று விளம்பர வார்த்தைகளை மட்டும் கூறுவதை விடுத்து, பள்ளிக்கூடங்களில் ஜாதிப் பிரிவினைகளை ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதுடன், தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்குமாறு தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்’’.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.