Khushbu on Ilayaraaja:கருத்து சுதந்திரம் குறித்து பேசுறாங்க.. பிறகு ஏன் இளையராஜாவுக்கு எதிர்ப்பு? குஷ்பு கேள்வி
கருத்துச் சுதந்திரம் குறித்து பேசும் எதிர்க்கட்சியினர் ஏன் இளையராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என பாஜகவின் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்
சென்னை பட்டினம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, எதிர்க்கட்சிகள் கருத்துச் சுதந்திரம் இல்லை என்றெல்லாம் பேசுகிறார்கள். பிறகு எப்படி, ஒரு இசையமைப்பாளர் ஒரு போஸ்ட் போட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கருத்து சுதந்திரம் குறித்து பேசுபவர்கள் இளையராஜாவின் கருத்தை ஏன் எதிர்க்கட்சியாலும், இடதுசாரிகளாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எதிர்க்கட்சிகள் தங்களது கருத்தை சொல்ல சுதந்திரம் இருப்பது போல இங்கு அனைவருக்கும் அவரவர் கருத்தை சொல்ல சுதந்திரம் உள்ளது என்றார்.
இதற்கிடையே, பாஜக தலைவர் ஜெ.பி நட்டா இளையராஜாவுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள், ஒரு வாய்ப்பையும் தவறவிடாமல், நாட்டின் மிக உயர்ந்த இசைக்கலைஞரான இளையராஜாவை அவமானப்படுத்திவருகிறார்கள். தாங்கள் சார்ந்த கட்சி விரும்பாத கருத்தைக் கூறிய ஒரே காரணத்திற்காக அவரை அவமானப்படுத்துவதா? இது ஜனநாயகமா? வெவ்வேறு கருத்துக்கள் இருந்தாலும், இணைந்து வாழமுடியும் என்பதே ஜனநாயகம்" என தெரிவித்திருக்கிறார்.
BJP Pres JP Nadda writes to country citizens to "think ahead & plan for how we all feel the nation must be when we mark 100 years of Independence in 2047."
— ANI (@ANI) April 18, 2022
"Youth of India want opportunities not obstacles & urge opposition to embrace politics of development," he further writes pic.twitter.com/ljYXOnQh8F
என்ன சொன்னார் இளையராஜா?
புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் என்ற நிறுவனம் சமீபத்தில் "மோடியும் அம்பேத்கரும்" என்ற பெயரிலான புத்தகத்தை வெளியிட்டது. அந்த புத்தகத்தின் முன்னுரையை இசைஞானி இளையராஜா எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. அதில், இளையராஜா, ”அம்பேத்கரை தெரிந்துகொள்வதை போல அவரது கருத்தையும், சிந்தனைகளையும் செயல்படுத்துபவர்களையும் நாம் நிச்சயம் ஊக்கப்படுத்த வேண்டும். நாட்டின் வளர்ச்சி, தொழில்துறை, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்டவைகளை மோடி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், அம்பேத்கரின் கருத்தும் சந்திக்கும் இடத்தை இந்த புத்தகம் ஆய்வு செய்ய முயற்சிக்கிறது.
பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் கீழ் நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், அனைத்து துறைகளிலும் முன்னேறி கொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அதில், பிரதமர் மோடியின் "மேக் இன் இந்தியா" திட்டம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத்தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்து, சமூகத்தில் பின் தங்கிய மக்களுக்கு சட்டரீதியிலான பாதுகாப்பை அவர் உறுதி செய்துள்ளார். வீடுகள், கழிப்பிடங்களை ஏழை மக்களுக்காக மோடியின் ஆட்சியில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடைந்துள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் முத்தலாக் தடை சட்டத்தால் பெண்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை கண்டு அம்பேத்கரே மோடியை நினைத்து பெருமைக்கொள்வார் என்றும் குறிப்பிட்டார்.