Arasan Soap Donation: சத்தமே இல்லாமல் அரசன் சோப் நிறுவனம் செய்த காரியம் இதுதான்..
விளம்பரமே இல்லாமல் மிகப் பெரிய காரியம் ஒன்றை செய்திருக்கின்றனர் அரசன் சோப் நிறுவனம்.
"அரசன் சோப் ரொம்ப ரொம்ப நல்ல சோப்" இந்த விளம்பரத்தை கேட்காதவர்கள் யாரும் தமிழகத்தில் பெரும்பாலும் இருக்க முடியாது.. சோப்பிற்கு அப்படி ஒரு விளம்பரத்தை கொடுத்தவர்கள், விளம்பரமே இல்லாமல் மிகப்பெரிய காரியம் ஒன்றை செய்திருக்கின்றனர். முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு சூர்யா குடும்பம் ஒரு கோடி, அஜித் 25 லட்சம், இயக்குனர் ஷங்கர் வெற்றிமாறன் நடிகர் ஜெயம் ரவி உள்ளிட்டோர் தலா 10 லட்சம் வழங்கியுள்ளதாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் அறிவிப்பே இல்லாமல் ஒன்றரை கோடி ரூபாய் நிதியை வழங்கி இருக்கிறது பிரபு சோப் ஒர்க்ஸ் என்னும் நிறுவனம்..
தமிழகத்தில் கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது அரசன் சோப் நிறுவனம். 1970-களில் தனது சோப் தயாரிப்பை தமிழகத்தில் முதல்முறையாக துவங்கியது. பெரும்பாலும் வடமாநில சோப் நிறுவனங்கள் தமிழகத்தில் கோலோச்சி கொண்டிருந்த காலமது. அப்போது முழுக்க முழுக்க தமிழகத்தில் தயார் ஆன அரசன் சோப் டிட்டர்ஜேண்ட் நிறுவனங்களின் சாம்ராஜ்யத்தில் மிக குறுகிய காலத்தில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியது. அதற்கு காரணம் அரசன் சோப் சந்தை படுத்தப்பட்ட விதம்தான். எளிமையான மக்களும் வாங்கக்கூடிய விலையில் தரமான சோப்புகளை உருவாக்கியது, அதேநேரம் விளம்பரத்திற்கு அவர்கள் கொடுத்த முக்கியத்துவம்.
"வெளுத்துக்கட்டு வெளுத்துக்கட்டு வெளுத்துக்கட்டு, மல்லிகை பூ போல துணியெல்லாம் விடுமே வெண்ணிலா பூத்திடுமே அரசனால" என தொடங்கி "அரசன் சோப் ரொம்ப ரொம்ப நல்ல சோப்" என்ற வரிகள் வரை தொடர்ச்சியாக சினிமா கொட்டாய் முதல், ரேடியோ வரை ஒலித்துக் கொண்டே இருக்க செய்தன. இதுவே அரசன் சோப்பை பட்டி தொட்டி வரைக்கும் கொண்டு போய் சேர்த்து. கேரளா, கர்நாடகா என தங்கள் சிலைகளை விஸ்தரித்துக் கொண்டே சென்ற அரசன் சோப் நிறுவனம், தொடங்கிய 25 ஆண்டுகளிலேயே 50 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டும் நிறுவனமாகவும் மாறியது..
இப்படி விளம்பரங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் அரசன் நிறுவனம், 1.5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கியதையும் விளம்பரப்படுத்தி இருக்கலாம், ஆனால் அதை சத்தமில்லாமல் செய்து, உண்மையிலேயே 'அரசர்' போல் நடந்துகொண்டுள்ளது..
அரசன் அன்றும் அரசன்... இன்றும் அரசன்.. என்றும் அரசன்... தானே என்னும் அவர்களின் விளம்பரத்திற்கு ஏற்றவாரே செயலும் அமைந்துள்ளது பாராட்டுக்குரியது...