TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: தமிழக மீனவர்களை கைது செய்து விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவகள் கைது:
கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் 4 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைதானவர்கள் தனுஷ்கோடியில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டு நிலையில், தற்போது மேலும் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தொடரும் கைது நடவடிக்கைகளை தவிர்க்கவும், சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்து தாயகம் கொண்டு வரவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கைது:
- கடந்த ஜூன் 17-ஆம் தேதி வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
- தொடர்ந்து ஜூன் 22ம் தேதியன்று ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அந்த பதற்றம் குறைவதற்கு முன்பாகவே கடந்த ஜூன் 25ம் தேதியன்று நாகை மாவட்டம் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 10 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்தனர்
அதாவது ஒருவார கால இடைவெளியிலேயே தமிழக மீனவர்கள் 36 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இதுதொடர்பாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கணடனம் தெரிவித்தனர்.
முதலமைச்சர் கடிதமும் - தமிழக அரசின் பதிலும்:
தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். அதில், “தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும். தற்போது இலங்கை வசமுள்ள 47 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்து இருந்தார். அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், “கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம், யாழ்பாணத்தில் உள்ள துணைத் தூதரக அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, கைது செய்யப்பட்டவர்களை முன்கூட்டியே விடுவிக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என தெரிவித்தார்.
214 இந்திய மீனவர்கள் கைது:
சில தினங்களுக்கு முன்பாக இலங்கை கடற்படை ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில், ”நடப்பாண்டில் மட்டும் இலங்கை கடற்பரப்புகளில் சட்டவிரோதமாக அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக 28 இந்திய மீன்பிடி படகுககளும், 214 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன் பிடிக்கும் நடவடிக்கைகளில் இருந்து தனது கடற்பரப்பை பாதுகாக்கும் பணியில் இலங்கை கடற்படை உறுதியாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.