Annamalai: மாத்தி மாத்தி பேசுவீங்களா?.. மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை சாடிய அண்ணாமலை!
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே அம்மாநில அரசு மேகதாது அணை கட்டித் தீருவோம் என உறுதியாக உள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

கர்நாடக தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு செயல்படுகிறதா என We The Leaders அமைப்பின் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேகதாது விவகாரம் - மத்திய அமைச்சர் பதில்
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே அம்மாநில அரசு மேகதாது அணை கட்டித் தீருவோம் என உறுதியாக உள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தொடர் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இப்படியான நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை எம்பி அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பூஷன் சௌத்ரி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அவர் அளித்த பதிலில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் திட்டத்தை உருவாக்கும்போதோ அல்லது செயல்படுத்தும்போதோ கர்நாடகா அண்டை மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என சொல்லப்படவில்லை என தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்ணாமலை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கர்நாடகா தேர்தலுக்கு அச்சாரமா?
அதில், கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று, மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் புதிதாக ஏற்படுத்த, காவிரி நதி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என நேற்றைய தினம், மாநிலங்களவையில், காவிரி நதி தொடர்பாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அன்று அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள், அணைக் கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க, கர்நாடக மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தின்படி, காவிரி கடைமட்டத்தில் பாயும் மாநிலங்களின், (குறிப்பாக தமிழ்நாட்டின்) ஒப்புதல் இன்றி, நதியின் குறுக்கே அணை உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்திலேயே தெளிவாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும், நலன்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது, கர்நாடகத் தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், மத்திய அரசு, நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா?
தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு, மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Before You Go
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
ட்ரெண்டிங் செய்திகள்






















