Ammonia Gas Leak: கோவை உருளைக்கிழங்கு சிப்ஸ் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு.. மக்கள் வெளியேற்றம்..!
கோவை மாவட்டத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் தொழிற்சாலையில் பராமரிப்பு பணியின்போது அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் காரமடை சிக்காரம்பாளையத்தில் தனியார் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் இயங்கி வருகிறது. இதில் பராமரிப்பு பணியின் போது அமோனியா வாய் கசிவு ஏற்பட்டது.
காரமடை அருகே உள்ள சிக்காரம்பாளையம் ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. பல்வேறு காரணங்களால் இந்த தொழிற்சாலை மூடப்பட்டது.
கடந்த பல மாதங்களாக செயல்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது புதிய உரிமையாளர் தொழிற்சாலையை வாங்கி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஊழியர்கள் தொழிற்சாலைக்குள் பராமரிப்பு பணியை மேற்கொண்டிருந்தனர் அப்போது எதிர்பாராத விதமாக தொழிற்சாலைகள் இருந்த அமோனியா கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டது.
இதனால் இரண்டு கிமீ தொலைவிற்கு சுற்றுவட்டார பகுதிகளில் வசித்த மக்கள் கண் எரிச்சல், மூச்சுத்திணறல், சுவாசப் பிரச்சினைகளால் அவதிப்பட்டனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் வீடுகளை விட்டு அவசர, அவசரமாக வெளியேறினார்கள்.
இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறையினர், காரமடை காவல்துறையினர் விரைந்து வந்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். தீயணைப்புத்துறையினர் கவச உடை அணிந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து அமோனியா வாயு கசிவை கட்டுப்படுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் உடனடியாக கேஸ் கசிவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் பாதுகாப்பிற்காக சம்பவ இடத்தில் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளாது. இதனால் சிக்காரம்பாளையத்தில் பதற்றமான சூழல் நிலவியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தொழிற்சாலை சுற்றி இருக்கக்கூடிய பொதுமக்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டபின், அதிகாரிகள் பரிசோதனை செய்த பிறகு பொதுமக்கள் மீண்டும் அவரவர் வீட்டிற்கு செல்ல உள்ளனர்.