பேண்ட்டை மாத்திட்டு வரேன்னுதான் சொன்னார், விடல.. - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மனைவி
தனது காற்சட்டையை (pant) மாற்றிவிட்டு வருவதாக அவர் தெரிவித்தார். ஆனால், அதற்கு கூட காவல்துறையினர் கால அவகாசம் கொடுக்கவில்லை - ஜெயக்குமார் துணைவியார்
காவல்துறையினரிடம் இருந்து தனது கணவரை பத்திரமாக மீட்டுத் தருமாறு ஜெயக்குமாரின் துணைவியார் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகிறது. இந்த தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடத்தப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், சில வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு போடும் சம்பவங்கள் நடைபெற்றதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பழைய வண்ணாரப்பேட்டை பகுதிக்குட்பட்ட 49-வது வார்டில் கள்ள ஓட்டுகள் பதிவு செய்ததாக திமுக நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அவமானப்படுத்திய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 47(கலகத்தில் ஈடுபடுதல்), 148 (பயங்கர ஆயுதங்களுடன் கலகத்தில் ஈடுபடுதல்), 294(பி) (ஆபாசமாக திட்டுதல்), 153 (கலகம் செய்ய தூண்டி விடுதல்), 355 (தாக்குதலில் ஈடுபடுதல்), 323 (காயம் ஏற்படுத்துதல்), 324 (ஆயுதம் அல்லது வேறு வழிகளில் காயம் ஏற்டுத்துதல்), 506(2) கொலை மிரட்டல் மற்றும் பொதுசொத்தை சேதப்படுத்தல் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், " ஒரு தனிமனிதனை கைது செய்ய இத்தனை காவல்துறையினர் படையெடுப்பதா? தனது காற்சட்டையை (pant) மாற்றிவிட்டு வருவதாக அவர் தெரிவித்தார். ஆனால், அதற்கு கூட காவல்துறையினர் கால அவகாசம் கொடுக்கவில்லை. பெரிய பெரிய அதிகாரிகள் வீட்டுக்கு வந்தனர். சரியாக, யார் யாரென்று எனக்குத் தெரியவில்லை. எனது கணவரிடம் சில ஆவணங்களை அளித்தனர். வழக்குப்பதிவு குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அவர்களும் பதில் அளித்தனர். எனது கணவரை எங்கு கொண்டு சொல்கிறார்கள் என்ன செய்ய போகிறார்கள்? போன்ற எந்த தகல்வகளும் எங்களிடம் இல்லை. அதுதான் எங்களை கவலையடைய செய்கிறது. பயமுறுத்துகிறது. எனது கணவர் நன்றாக இருந்தால் போதும். பத்திரமாக வீட்டுக்கு வர வேண்டும். பத்தரிக்கையாளர்கள் எங்களுக்கு உதவி செய்யவேண்டும் " என்று தெரிவித்தார்.
ஒ. பன்னீர்செல்வம் கண்டனம்: உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் அராஜகத்தையும், வன்முறை வெறியாட்டத்தையும், ஜனநாயகப் படுகொலையையும் தட்டிக்கேட்ட கழக அமைப்புச் செயலாளரும் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாரை காவல்துறை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்: சென்னையில் ஜெயக்குமார் கள்ள ஓட்டு போட வந்தவரை விரட்டி பிடித்து முறையாக காவல்துறையினரிடம் ஒப்படைத்தது தவறு என்று முதலமைச்சர் சொல்கிறாரா? முதல்வர் ஸ்டாலின் கள்ள ஓட்டு போடுவதை தூண்டினாரா?இதற்கு என்ன பதில் முதலமைச்சர் சொல்ல போகிறார்,அஇஅதிமுக சட்டரீதியாக எதையும் சந்திக்க தயார்! என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார.