Actor Sri: மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ.. குடும்பத்தினர் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க...
நடிகர் ஸ்ரீ-யின் உடல்நிலை குறித்து சமீபத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி பேசுபொருளான நிலையில், அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர் ஸ்ரீ (எ) ஸ்ரீராமின் சமீபத்திய சமூக வலைதள பதிவு ஒன்று வைரலான நிலையில், அந்த பதிவில் இருந்த அவரது புகைப்படத்தை பார்த்து, அவரது உடல்நிலை குறித்து சமீபத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி பேசுபொருளானது. இந்த நிலையில், அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ஸ்ரீ பதிவிட்ட புகைப்படங்கள் வைரல்
இன்றைய தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குனராக உலா வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படமான மாநகரம் படத்தின் கதாநாயகன் ஸ்ரீராம் தான். இந்த நிலையில், நடிகர் ஸ்ரீயின் செயல்பாடுகள் ரசிகர்களுக்கு கவலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
அதாவது, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் அவர் மீது கவலை கொள்ளச் செய்யும் அளவிற்கு உள்ளது. மேலாடையில்லாமல் பல புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகர் ஸ்ரீ, கர்மா காரணமா? காசு காரணமா? 37 வருடங்கள் ஏமாற்றிக் கொண்டு இருந்துள்ளேன் என்று விசித்திரமாக பல பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.
மேலும், கடந்த ஒரு வருடமாக நீண்ட தலைமுடியை வளர்த்து வந்த அவர், தற்போது அந்த முடியில் வண்ணங்கள் பூசி தனக்கு அழகான பெண்கள் மற்றும் பெண்ணாக மாறிய ஆண்கள் குறுஞ்செய்தி அனுப்பலாம் என்றும் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவுகளும், அவரது செயல்பாடுகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்ன நடந்தது? ஏன் இப்படி இருக்கிறீர்கள்? என்று சோகத்துடன் கேட்டு வருகின்றனர். மேலும், அவருக்கு உரிய சிகிச்சை மற்றும் ஆலோசனை தேவைப்படுவதாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
37 வயதான நடிகர் ஸ்ரீ இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சோன் பப்டி, வில் அம்பு, மாநகரம், இறுகப்பற்று ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவர் இறுகப்பற்று படத்தில் நடித்தார். ரசிகர்களின் கேள்விக்கு அவர் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மேலும், அவர் புதியதாக எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போதைய சூழலில், நடிகர் ஸ்ரீயின் மன நிலை மற்றும் உடல்நிலையை கண்டு ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
நடிகர் ஸ்ரீ-யின் குடும்பத்தினர் அறிக்கை
இப்படிப்பட்ட சூழலில், நடிகர் ஸ்ரீ-யின் குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், நடிகர் ஸ்ரீராம் உயர்தர மருத்துவ சிகிச்சையில் உள்ளதாகவும், மருத்துவர்களின் அறிவுரைப்படி சமூக வலைதளங்களிலிருந்து விலகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அவர் உடல்நிலையில் கவனம் செலுத்திவருவதால் அவருக்கு தனிமை தேவைப்படுவதாகவும், அதனால் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், அவரது உடல்நலன் குறித்த தவறாக தகவல்களை பரப்புவதை நிறுத்த வேண்டும் என்றும், அதுபோன்ற செய்திகள் அவருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதால் அவ்வாறு செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அவரது உடல்நிலை குறித்த தவறான தகவல்கள் அடங்கிய வீடியோக்களை ஊடகங்கள் நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள ஸ்ரீராமின் குடும்பத்தினர், தனிப்பட்ட நபர்கள் சிலர் தரும் பேட்டிகளில் உண்மை இல்லை என்றும் அதை தாங்கள் முற்றிலும் மறுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அவரது குடும்பத்தினரின் அறிக்கையை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 18, 2025

