Actor Sivaji Home: அப்பாடா.. சிவாஜி குடும்பத்திற்கு நிம்மதி.. வீடு ஜப்தி உத்தரவு ரத்து.. எப்படி தெரியுமா.?
நடிகர் சிவாஜி கணேசனின் இல்லத்தை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இதனால், நடிகர் பிரபு நிம்மதியடைந்துள்ளார்.

நடிகர் திலகம் என்று மக்களால் போற்றப்படும் சிவாஜி கணேசனின் இல்லத்தை ஜப்தி செய்ய சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், நடிகர் பிரபு தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, அந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
படத்தயாரிப்பில் ஈடுபட்ட சிவாஜி பேரன் துஷ்யந்த்
சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமாக துஷ்யந்த், அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து, ஈசன் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பாக, ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்துள்ளனர். விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவான இந்த படத்தின் தயாரிப்பு செலவுகளுக்காக, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளனர். அந்த கடனை வருடத்திற்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பி அளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர்.
நீதிமன்றத்திற்கு சென்ற வழக்கு - ஜப்திக்கு உத்தரவு
இந்த கடனை, ஒப்புக்கொண்டபடி ஈசன் பட நிறுவனம் திருப்பி செலுத்தாததால், வழக்கு தொடரப்பட்டு, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி. ரவீந்திரன் நியமிக்கப்பட்டார். அவர் விசாரித்ததில், கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்ந்ததால், அதனை வசூலிக்க ஏதுவாக, ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் நிறுவனத்திற்கு எழுதிக் கொடுக்கும்படி, கடந்த 2024 மே மாதம் உத்தரவிட்டார்.
படத்தை விற்று, கடன் தொகையை எடுத்துக்கொண்டு, மீதித் தொகையை ஈசன் நிறுவனத்திடம் வழங்கும்படியும், தனபாக்கியம் நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், படம் முழுமையடையவில்லை எனக் கூறி, தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்ததால், துஷ்யந்த்தின் தந்தை ராம்குமார் வசிக்கும் அவரது தந்தை சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், நிலுவையில் உள்ள கடன் தொகை 3 கோடியே 39 லட்சத்து 5 ஆயிரத்து 543 ரூபாய் எனவும் கூறியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. ஈசன் நிறுவனம் சார்பில் கேட்கப்பட்ட அவகாசத்தையும் நிராகரித்தார் நீதிபதி.
ஜப்தி உத்தரவு ரத்தானது எப்படி.?
நடிகர் சிவாஜி கணேசனின் இல்லத்தை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் பிரபு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், அந்த இல்லம் தனக்கே சொந்தமானது என்று அவர் தெரிவித்திருந்த நிலையில், அதை ஏற்று, சென்னை உயர்நீதிமன்றம் ஜப்தி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதோடு, நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் என்பதையும் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும், வில்லங்கப் பதிவில் நீதிமன்ற ஜப்தி உத்தரவை நீக்கவும், பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, அன்னை இல்லத்தில் தனக்கு எந்த பங்கும் இல்லை என துஷ்யந்த்தின் தந்தை ராம்குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில், நடிகர் பிரபுவுக்கே அந்த இல்லம் சொந்தம் என்பதால், ஜப்தி உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

