அபராதமா... அவகாசமா... நடிகர் தனுஷின் ரோல் ராய்ஸ் கார் வழக்கில் இன்று தீர்ப்பு!
ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் நடிகர் தனுஷ் தொடர்ந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்க உள்ளதாக நீதிபதி எஸ்.சுப்ரமணியம் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது
ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் இன்று (05/08/2021) தீர்ப்பளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் நடிகர் தனுஷ் தொடர்ந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்க உள்ளதாக நீதிபதி எஸ்.சுப்ரமணியம் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு காருக்கு நுழைவு வரி ரூ.60.66 லட்சம் செலுத்த வணிகவரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் வழக்கு தொடர்ந்திருந்தார். 50 சதவீதம் வரி செலுத்தினால் காரை பதிவு செய்ய ஆர்டிஓ அலுவலகத்துக்கு 2015ஆம் ஆண்டு அக்டோபரில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ரூ.30.33 லட்சம் வரி செலுத்தியதாக தனுஷ் கூறியதால் விதிகளை பின்பற்றி பதிவு செய்ய 2016ஆம் ஆண்டு ஏப்ரலில் உத்தரவிடப்பட்டது.
இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் போடப்பட்டுள்ளன. கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றம், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று கடந்த 2019ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.