Chennai Rain: சென்னைக்கு கிழக்கே 160 கிமீ தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்..! எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவுகின்ற காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, சென்னைக்கு அருகே 160 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திர, தமிழக-புதுவை கடற்கரை நோக்கி நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுவிழக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
சென்னைக்கு அருகில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்:
இந்நிலையில், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, சென்னைக்கு கிழக்கே 160 கிமீ தொலைவிலும், யாழ்ப்பாணத்திலிருந்து வட-வடகிழக்கே 410 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா-வட தமிழகம்-புதுச்சேரி கடற்கரையை நோக்கி காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகர்ந்து, பிற்பகலுக்குள் படிப்படியாக வலுவிழந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக மாற வாய்ப்புள்ளது எனவும் கணித்துள்ளது.
Continuing to move west-northwestwards towards south Andhra Pradesh-North Tamilnadu-Puducherry coasts, it is likely weaken gradually into a well-marked low pressure area during next 12 hours. pic.twitter.com/uaNLNXEFz1
— India Meteorological Department (@Indiametdept) November 21, 2022
கனமழை எச்சரிக்கை:
இதன் காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக-புதுவை கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.