TN Weather Update: 18 மாவட்டங்களில் கொளுத்திய வெயில்.. இன்றைய வானிலை எப்படி இருக்கும்? மழைக்கு வாய்ப்பா? முழு நிலவரம்..
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஒரு புறம் வெயில் இருந்தாலும் ஒரு சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை :
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 41.8 டிகிரி செல்சியச் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து திருத்தணியில் 41.1 டிகிரி செல்சியஸ், மதுரையில் – 39.9 டிகிரி செல்சியஸ், திருச்சியில் – 39.1 டிகிரி செல்சியஸ், தூத்துக்குடியில் – 39.5 டிகிரி செல்சியஸ், பரங்கிப்பேட்டை – 39 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தி – 39.5 டிகிரி செல்சியஸ், ஈரோடு – 39.2 டிகிரி செல்சியஸ், நாமக்கல் மற்றும் நாகையில் – 38.5 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூர் – 38.5 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூர் – 38 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டை – 38.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 40.7 டிகிரி செல்சியஸும் நுங்கம்பாக்கத்தில் 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் வானகரம், எம்.ஆர்.சி நகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் 39.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வரும் திங்கள் முதல் வெப்பநிலை சற்று குறையும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என தமிழ்நாட்டின் வெதர்மேன் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.
வெப்ப சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10.06.2023 முதல் 12.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.