IPS Officers Transfer: 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 13 காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்த தமிழ்நாடு அரசு !
11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அவ்வப்போது காவல்துறை உயர் அதிகாரிகளை மாற்றி வருகிறது. அந்தவகையில் தற்போது மீண்டும் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட சில காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பணியிடை மாற்றத்தை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாணை வெளியாகியுள்ளது.
அதன்படி தற்போது செங்கல்பட்டு மாவட்ட எஸ்பியாக உள்ள அரவிந்த் ஐபிஎஸ் க்கு பதிலாக சுகுனா சிங் ஐபிஎஸ் செங்கல்பட்டு மாவட்ட எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தின் எஸ்பியாக நிஷா சிங் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் நாமக்கல் மாவட்ட எஸ்பியாக இருந்த சரோஜ் குமார் தாகூர் ஐபிஎஸ் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிருஷண்கிரி மாவட்ட எஸ்பியாக இருந்த சரண் தேஜஸ்வி ஐபிஎஸ் நாமக்கல் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தி.நகரின் துணை ஆணையராக இருந்த ஹரி கிரண் பிரசாத் ஐபிஎஸ் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கோயம்பத்தூர் மாவட்ட எஸ்பியாக இருந்த செல்வநாகரத்தினம் ஐபிஎஸ் தற்போது தமிழ்நாடு காவல்துறை அகாடமியின் துணை இயக்குநராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே கடந்த வாரம் சில முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு பதவி உயர்வு வழங்கியது. அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் சில முக்கிய காவல்துறை அதிகாரிகளை தமிழ்நாடு அரசு பணியிடை மாற்றம் செய்துள்ளது.
முன்னதாக கடந்த 10ஆம் தேதி ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வை அறிவித்திருந்தது. அதன்படி ஏடிஜிபியாக இருந்து வரும் ரவி ஐபிஎஸ், அம்ரேஷ் புஜாரி ஐபிஎஸ், ஜெயந்த முரளி ஐபிஎஸ் மற்றும் கருணாசாகர் ஐபிஎஸ் ஆகியோர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று இருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்