(Source: ECI/ABP News/ABP Majha)
Saithai Duraisamy :காணாமல் போன மகன்...தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி சன்மானம் - சைதை துரைசாமி அறிவிப்பு
காணாமல் போன தன் மகன் குறித்த தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.
சென்னை மாநகரின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர் தன் படபிடிப்பிற்கு இடம் தேர்வு செய்ய தன் நண்பருடன் காரில் சட்லஜ் நதிக்கரை அருகே சென்றபோது, திடீரென கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்தது.
கஷங் நாலா பகுதியில் இந்த விபத்து நடந்த நிலையில், காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் உயிரிழந்தார். காரில் இருந்த மற்றொருவர் காயத்துடன் மீட்கப்பட்டார். ஆனால், சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மட்டும் ஆற்றில் விழுந்து மாயமானார். இந்நிலையில் காணாமல் போன தனது மகன் பற்றிய தகவல் தெரிவித்தால் , ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என சைதை துரைசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை நந்தனத்தில் குடும்பத்துடன் வசிக்கும் சைதை துரைசாமியின் மகன் திரைப்பட இயக்குனராக உள்ளார். வெற்றி தான் புதிதாக இயக்க உள்ள திரைப்படத்தின் படபிடிப்புக்காக இடங்களை தேர்வு செய்வதற்காக சில நாட்களுக்கு முன் விமானம் மூலம் ஹிமாச்சல பிரதேசம் சென்றார். அவருடன் அவரின் நண்பர் ஒருவரும் சென்றார்.
அப்போது கஷாங் நாலா பகுதியில் அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சட்லஜ் நதி ஓடும் மலைப்பகுதியில் ஒரு வாடகை காரில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த காரை ஓட்டி வந்த தன்ஜின் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்தது. இதனையடுத்து உள்ளூர் போலீசார் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். போலீசாரின் நீண்ட தேடுதலுக்கு பின்னும் வெற்றி கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று தன் மகன் வெற்றி துரைசாமி காணாமல் போன தகவல் அறிந்த துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் ஹிமாச்சல பிரதேசம் சென்றனர். அங்கு சைதை துரைசாமி இமாச்சல பிரதேச போலீசாரிடம் மீட்பு பணிகள் குறித்து உடனிருந்து கேட்டு வருகிறார். இந்நிலையில், அம்மாநில போலீசார் வெற்றி துரைசாமியின் நிலை குறித்து கண்டறிய 2 நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் துரைசாமி குடும்பத்தினர் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
ஹிமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு மற்றும் தொடர் மழை பெய்து வருகிறது. ஹிமாச்சல பிரதேசத்தில் இதுவரை 645 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதில் 4 தேசிய நெடுஞ்சாலைகளும் அடங்கும். இதனால், துரைசாமியின் மகனை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக மீட்பு பணிகளை மேற்கொள்வதில் மீட்பு படையினருக்கும், போலீசாருக்கும் சவாலாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.