"தமிழ்நாட்டுக்கு 10 லட்சம் கோடி கடன் இருக்கும் நிலையில், வளர்ச்சித் திட்டங்கள் ஏதும் இல்லை" - அன்புமணி ராமதாஸ் பேச்சு
கல்லூரி மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகி வந்த நிலையில், தற்போது பள்ளி மாணவர்களுக்கு மது அருந்த தொடங்கி விட்டனர்.
![With Tamil Nadu having a debt of Rs 10 lakh crore, there are no development projects Anbumani Ramadas](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/16/250812015cba75325dab3f06cc42e7a7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கல்லூரி மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகி வந்த நிலையில், தற்போது பள்ளி மாணவர்களுக்கு மது அருந்த தொடங்கிவிட்டனர் என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்
சேலம் மேற்கு மற்றும் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் சேலம் வருகை தந்தார். அவருக்கு சேலம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஓமலூர் தாரமங்கலம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”பெட்ரோல் டீசல் விலை சர்வதேச சந்தையில் குறைந்தாலும், இந்தியாவில் மட்டுமே உயர்த்தி வருகின்றனர். 50 ரூபாய்க்கு மேலாக வரியாக செல்கிறது. கொரோனாவில் வேலை வாய்ப்பை இழந்துள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் மற்ற எல்லா பொருட்களும் விலை உயர்ந்து பொது மக்களை அதிகமாக பாதித்து வருகிறது. மாநில அரசும் தன் பங்கிற்கு சொத்து வரியை உயர்த்தி உள்ளது. இதனால், குறைந்த வருவாய் உள்ள வாடகை வீட்டில் வசிக்கும் நடுத்தர மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். வாடகை உயர்த்தப்படும் நிலை இருப்பதால் சொத்து வரி உயர்வை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தமிழகத்திற்கு 10 லட்சம் கோடி கடன் இருக்கும் நிலையில், வளர்ச்சித் திட்டங்கள் ஏதும் இல்லை. மதுவால் கிடைக்கும் 65 ஆயிரம் கோடி ரூபாயை கொண்டு தான் அரசு செயல்பட்டு வருகிறது” என்றார்.
”மதுவால் வருமானம் கிடைத்தாலும், இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்றால், மதுக் கடைகளை தமிழக அரசு உடனடியாக மூட வேண்டும் என்று கூறினார். இதற்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். மேலும், கல்லூரி மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகி வந்த நிலையில், தற்போது பள்ளி மாணவர்களுக்கு மது அருந்த தொடங்கி விட்டனர். கஞ்சா போன்ற போதை பொருட்கள் எளிதில் கிடைப்பதால் போதைக்கு மாணவர்கள் அடிமையாகி வருகிறார்கள். இது தொடர்பாக தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக கூறினார். தமிழகத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு ஏதும் இல்லாத நிலை உள்ளது. பீகார் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் இங்கு வேலை செய்து வருகின்றனர்” என்றார்.
”சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்குவதாக கூறி தனியாருக்கு விற்பதற்கு முயற்சி நடக்கிறது. சேலம் உருக்காலை அமைவதற்காக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மிக குறைந்த விலைக்கு தங்களுடைய நிலத்தை கொடுத்தனர். சேலம் உருக்காலையை தனியாருக்கு கொடுப்பதாக இருந்தால், அந்த நிலங்களை மீண்டும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்” என்றும் கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)