மேலும் அறிய
Advertisement
தாயை தேடி அலைந்த குட்டிகள் யானை கூட்டத்துடன் சேர்ந்தது - மகிழ்ச்சியில் வனத்துறை
மாரண்டஹள்ளி அருகே தாயை தேடி அலைந்த இரண்டு யானை குட்டிகள், வனப் பகுதிக்குள் நுழைந்து, மூன்று யானைகளுடன் சேர்ந்தது. வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அடுத்த காளி கவுண்டன் கொட்டாய் அருகே மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் உயிரிழந்த நிலையில், தாயை தேடி பரிதாபமாக சுற்றி வந்த இரண்டு குட்டி யானைகளும் ஐந்து நாட்களுக்குப் பிறகு அந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்து வனப்பகுதிக்குள் நுழைந்தது. தற்பொழுது மூன்று யானைகள் கூட்டத்தில் இணைந்துள்ளது. இதனை பாலக்கோடு வனத்துறையினர் பறக்கும் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்தில் மாரண்டஹள்ளி அருகே 2 குட்டிகளுடன் 2 பெண் மற்றும் 1 ஆண் யானை என 5 யானைகள் கடந்த ஒரு மாதமாக முகாமிட்டு அங்குள்ள விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியும் வந்தது. இந்நிலையில் பாலக்கோடு அடுத்த காளிகவுண்டன் கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி கடந்த 7 ம் தேதி இரவு 2 பெண் மற்றும் ஆண் யானை என மொத்தம் 3 யானைகள் உயிரிழந்தது. இந்த யானைகளுடன் வந்த 2 குட்டி யானைகள் தாய் யானை உயிரிழந்தது தெரியாமல் தட்டி தட்டி எழுப்பி பரிதாபமாக அதே பகுதியிலேயே தவிப்புடன் சுற்றி வந்தது.
இந்த இரண்டு குட்டி யானைகளையும் பாதுகாப்பாக மீட்டு முதுமலை சரணாலயத்தில் அல்லது யானை கூட்டத்தில் விடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட வனத்துறையினர் மாவட்ட வன அலுவலர் அப்பல்லோ நாயுடு, மண்டல வன கோட்ட அலுவலர் வின்சென்ட், மருத்துவர் பிரகாஷ், பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையிலான வனத்துறையினர், வேட்டைத் தடுப்பு காவலர்கள் யானை குட்டிகளை பாதுகாப்பாக மீட்பதற்கு கடந்த 7 நாட்களாக தொடர்ந்து இரவு பகலாக கண்காணித்து வந்தனர்.
ஆனால் தாய் யானைகள் உயிரிழப்பதற்கு முன் குட்டிகளை உணவுக்காக அழைத்துச் சென்ற கல்லாகரம், உத்துபள்ளம் ஓடை உள்ளிட்ட பகுதிகளில் பகலில் சென்று தஞ்சம் அடைவதும் இரவில் தாய் யானை உயிரிழந்த இடத்திற்கு வந்து தேடுவதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில் இரண்டு குட்டி யானைகளும், கடந்த 5 நாட்களுக்கு பிறகு விவசாய நிலத்தை விட்டு வெளியேறி, மாரண்டஹள்ளி அடுத்த அத்திமுட்டுலு கிராமம் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. இந்த இரண்டு குட்டி யானைகளையும் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் இரண்டு பிரிவுகளாக பிரிந்து பின் தொடர்ந்து சென்றனர். மேலும் 2 குட்டி யானையும் மீண்டும் வனப்பகுதியில் இருந்து தாய் யானை இறந்த இடத்திற்கு வர வாய்ப்புள்ளதால், அத்திமுட்டுலு பகுதியில் பாலக்கோடு வனக் குழுவினர் முகாமிட்டு ட்ரோன் கேமரா மூலம் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் அத்திமூட்டுலு வனப்பகுதியில் இருந்த 3 யானைகளுடன் கூட்டத்துடன் இந்த இரண்டு குட்டி யானைகளும் தற்போது இணைந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து வனத்துறையினர் குட்டி யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் யானையை பிடித்து அழைத்துச் செல்வதற்காக முதுமலையிலிருந்து வரவழைக்கப்பட்ட யானைப்பாகன் பொம்மன் உள்ளிட்ட குழுவினர் இரண்டு நாட்கள் யானை நடமாட்டத்தை கண்காணித்து, வீடியோ ஆதாரங்களுடன் திரும்பிச் செல்ல திட்டமிட்டுள்ளனர். மேலும் தாயை இழந்த குட்டி யானைகள் பரிதாபமாக சுற்றி வந்த நிலையில், தற்பொழுது ஒரு யானை கூட்டத்துடன் இணைந்துள்ளதால், வனத்துறையினரும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வனப்பகுதியை விட்டு யானை கூட்டங்கள் விவசாய நிலங்களுக்கு வராமல் வனத்துறையினர் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion