அரை நிர்வாணமாக வந்த கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்... 6 பேர் தற்கொலை முயற்சி.. சேலத்தில் நடந்தது என்ன?
ஆதார் கார்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்தையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்தனர்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே காஞ்சேரி காட்டுவளவு கிராமத்தில் 30 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பமாக வசித்து வருகின்றனர். இங்கிருந்து மருத்துவ தேவைக்காகவும், பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்தி தருமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, மலைவாழ் மக்கள் அரை நிர்வாணமாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து தங்களது ஆதார் கார்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்தையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்தனர்.
அரை நிர்வாணமாக வருவதையொட்டி காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் காவல்துறையினரை தடுப்பை மீறி நுழைவாயில் முன்பு அரை நிர்வாணமாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட நபரை குண்டுகட்டாக தூக்கி சென்று அப்புறப்படுத்தினர். பின்னர் காவல்துறையினரிடம் மலைவாழ் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பள்ளிக் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் மூன்று கிலோமீட்டர் சுற்றி வனப்பகுதியில் சென்று வருவதாகவும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளதாக வேதனை தெரிவித்தனர். எனவே கரடு புறம்போக்கு இருக்கும் பகுதியில் சாலை அமைத்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவ்வாறு சாலை அமைத்துக் கொடுத்தால் அரை கிலோ மீட்டர் தூரத்தில் பள்ளிக்கூடம் இருக்கும் சாலைக்கு சென்றடைந்து விடலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.
இதேபோன்று, சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் அவரது மனைவி மற்றும் மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர் உடனே பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தபோது, கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 33 சென்ட் நிலத்தை குத்தகைக்கு விட்ட நிலையில் ஆக்கிரமித்துக் கொண்டு சக்திவேல் என்பவர் நிலத்தை காலி செய்ய மறுப்பதாக குற்றம் சாட்டினர் நிலத்தை உடனே மீட்டுத்தரக்கோரி கோரிக்கை விடுத்தனர்.
இதேபோல் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த சாந்தி என்ற பெண் தனது சகோதரர் சீனிவாசன் என்பவருக்கு ஐந்து லட்சத்து 50 ஆயிரம் பணத் தேவைக்காக நகை மற்றும் வீட்டை அடமானம் வைத்து பணம் கொடுத்த நிலை திரும்ப தர மறுப்பதாக கூறி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
மேலும் சேலம் பெருமாம்பட்டி பகுதியை சேர்ந்த சுந்தர் ராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தின் குறுக்கே மின் இணைப்பு லைன் செல்வதால் ஐந்தடி தள்ளி அமைக்குமாறு கோரிக்கை விடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் பெட்ரோல் கேன் எடுத்துவந்த நிலையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)