சேலம்: நடிகை நமிதாவின் கணவருக்கு காவல்துறையினர் சம்மன்! காரணம் என்ன?
கோபால் சாமி என்பவர் கொடுத்த புகார் மனுவில் தமிழக தலைவர் பதவியை நமீதாவின் கணவர் சவுத்ரி நான்கு கோடி ரூபாய் கொடுத்து பெற்றதாக தெரிவித்திருந்தார்.
சேலத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறு, குறு, நடுத்தர தொழில் அமைப்பின் பெயரில் MSME ப்ரோமோஷன் கவுன்சில் என்ற அமைப்பின் பேரில் சேலம் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவன உரிமையாளர்களுடான கலந்துரையாடல் கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் அந்த அமைப்பின் தேசிய தலைவரான மதுரை உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துராமன், அமைப்பின் தேசிய செயலாளரான பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த துஷ்யன் யாதவ், மற்றும் தமிழகத்தின் தலைவரான பாஜக பிரமுகரும் நடிகையுமான நமிதாவின் கணவர் சவுத்ரி ஆகியோர் கலந்துகொண்டு சிறு, குறு தொழில் நிறுவன உரிமையாளர்களிடம் மத்திய அரசின் கடன் விவரம் குறித்து பேசினர். மேலும் இதில் சிறப்பு அழைப்பாளராக நமீதாவும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் கூட்டத்தின் பேனரில் இந்திய அரசின் அசோக முத்திரை பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலும் கவுன்சிலின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் இந்திய அரசின் அரசு முத்திரையை அவர்களது வாகனத்தில் தவறாக பயன்படுத்தி இருந்ததோடு, தேசிய கொடியை வாகனத்தில் பொறுத்திருந்தது குறித்து புகார் எழுந்தது. மேலும் சேலம் மாநகர் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த கோபால் சாமி என்பவர் தன்னிடம் ரூபாய். 41 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக தேசிய தலைவர் முத்துராமன், அமைப்பின் தேசிய செயலாளரான பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த துஷ்யன் யாதவ் ஆகிய இருவர் மீது புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்து சேலம் மாநகர் சூரமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி புகாரின்பேரில் இந்த அமைப்பின் தேசிய தலைவர் முத்துராமன் மற்றும் தேசிய செயலாளர் துஷ்யந்த் யாதவ் ஆகிய இருவர் மீதும் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அந்த அமைப்பின் தலைவர் முத்துராமன் மற்றும் செயலாளர் துஷ்யந்த் யாதவ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த அமைப்பின் தலைவரும், செயலாளரும் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்தது. இதனால் இவர்கள் இருவரையும் காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. இதனைத் தொடர்ந்து முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் ஆகிய இருவரையும் மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கோபால் சாமி கொடுத்த புகார் மனுவில் தமிழக தலைவர் பதவியை நமீதாவின் கணவர் சவுத்ரி நான்கு கோடி ரூபாய் கொடுத்து பெற்றதாக தெரிவித்திருந்தார். இதன்பேரில் நமீதாவின் கணவர் சவுத்ரி மற்றும் முத்துராமனின் உதவியாளர் மஞ்சுநாத் ஆகிய இருவரும் இன்று சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. உண்மையில் நான்கு கோடி ரூபாய் கொடுத்து பதவியை வாங்கினாரா? மேலும் இவரும் பணம் கொடுத்து மோசடியில் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.