மக்கள் கொடுத்த மனுவை குப்பையில் வீசிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் - மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் சின்னசேலம் பேருந்து நிலையத்தில் குப்பையில் வீசிய அதிகாரியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பட்டம் வழங்குதல், முதியோர் தொகை விண்ணப்பித்தல், பட்டா மாறுதல், நில அபகரிப்பு புகார்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக வருகின்றனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படும் மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசநத்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் காந்திமதி, சடையம்மாள், மருதாம்பாள், தென்னங்குடிபாளையம் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் உள்ளிட்டோர் கடந்த 4-ம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் இலவச வீட்டு மனை பட்டா, கலைஞர் கனவு இல்லம், சாக்கடை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனு அளித்துள்ளனர். அதன் மீது மனு எண் குறிப்பிட்டு சீல் வைக்கப்பட்டு ஆத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர்களுடைய மனுக்கள் உள்பட 10க்கும் மேற்பட்ட மனுக்கள் கடந்த 6-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேருந்து நிலையம் பகுதியில் குப்பையில் கிடந்துள்ளது.
இதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்பவர் மனுவில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்த மனுக்களை அதில் உள்ள முகவரிக்கு தபால் மூலமும் அனுப்பியுள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த மனுக்கள் வேறு மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் குப்பையில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் ஆத்தூர் தாசில்தார் பாலாஜி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தொடர்புடைய ஆத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்ராஜ் தாரமங்கலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
வருவாய் துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கிய மனுக்கள் இரண்டே நாளில் வேறு மாவட்டத்தில் குப்பைக்கு சென்றது குறித்து முதலமைச்சருக்கு ஆன்லைன் மூலம் புகார் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள மக்கள் குறைதீர் கூட்டத்தில் மீண்டும் ஆட்சியரை சந்தித்து குப்பையில் இருந்து மீட்கப்பட்ட தங்களுடைய கோரிக்கை மனுக்களை வழங்க உள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் கோரிக்கை மனுக்களை குப்பையில் வீசிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி இன்று தொடர்புடைய அலுவலர் மோகன்ராஜை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட கோரிக்கை மனு குப்பையில் வீசப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.