Periyar University: ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை: பெரியார் பல்கலை. எச்சரிக்கை
பெரியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் எந்தவித போராட்டங்கள் நடத்துவதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மருத்துவ விடுப்பு முடிந்து கடந்த திங்கட்கிழமை மீண்டும் பணிக்கு திரும்பிய பொறுப்பு பதிவாளர் தங்கவேல் கணினி அறிவியல் துறை தலைவர் ஆக பதவி ஏற்று கொண்டார். கடந்த பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி அரசு அறிவிப்பிற்கு ஏற்ப துணைவேந்தர் பணியிடை நீக்கம் செய்ய, தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். இன்னும் மூன்று நாட்களில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் துணைவேந்தர் பணியிடை நீக்கம் செய்ய மறுக்கப்படுகிறது. துணை வேந்தர் ஜெகநாதன் முடிவு எடுக்கவில்லை என்றால் பொதுக்குழு செயற்குழுவைக் கூட்டி அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக ஆசிரியர் மற்றும் பணியாளர் சங்கம் நேற்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் உள்சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். பெரியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் எந்தவித போராட்டங்கள் நடத்துவதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை, மேலும் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் இல்லாத பணியாளராகிய அனைவரும் அறிந்ததே. பல்கலைக்கழகத்தில் தற்போது நடைபெறும் நிகழ்வுகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகமானது பல்கலைக்கழக சாசன விதிகளின்படி மற்றும் சட்டவிதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். எனவே பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதி இல்லாமல் தேவையற்ற வகையில் எந்தவித போராட்டங்களை நடைபெற செய்தால் அல்லது கலந்து கொண்டால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அசாதாரண சூழ்நிலையை பல்கலைக்கழக பணியாளர்களாகிய தாங்கள் ஏற்படுத்த வேண்டாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் அவ்வாறு முன் அனுமதி இல்லாமல் நடைபெறும் எந்தவிதப் போராட்டங்களிலும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் இல்லாத பணியாளர்கள் என்ற முறையில் கலந்துகொண்டால் அவர்களின் மீது பல்கலைக்கழக சாசன விதிகளின்படி உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் உள் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை பல்கலைக்கழகத்தில் அனைத்து ஆசிரியர்களும் மற்றும் ஆசிரியர் இல்லாத பணியாளர்கள் காலமுறை, தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி பணியாளர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.