Crime: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது
சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் பரப்புதல் உள்ளிட்ட ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து குமரேசனை செவ்வாய்பேட்டை காவல் துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாநகர் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர் நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக இருந்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி கருத்துக்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை அவதூறாக சித்தரித்து புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து திமுக தகவல் தொழில்நுட்பபிரிவு சார்பில் சேலம் மாநகர் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த குமரேசனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் பரப்புதல் உள்ளிட்ட ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து குமரேசனை செவ்வாய்பேட்டை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து இன்று சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குமரேசன் ஆஜர் படுத்தப்பட்டார். மேலும் நாம் தமிழர் கட்சியின் குமரேசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் குமரேசனுக்கு ஜாமீன் வழங்குமாறு நீதிபதியிடம் வாதத்தை முன் வைத்தனர். வாதத்தை விசாரித்த நீதிபதி நவம்பர் மாதம் மூன்றாம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டார். முன்னாள் முதல்வர் குறித்து அவதூறு பரப்பிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.