மேட்டூர் அணை 42ம் ஆண்டாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது - 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சேலம், திருச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வந்த நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 10 மணிக்கு அதன் முழு கொள்ளளவான 120 அடியே எட்டியது. மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 89 ஆண்டுகளில் 42 ஆம் ஆண்டாக அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. மேட்டூர் அணை நிரம்பியதால் அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக உபரி நீர் வெளியேற்றி வருகின்றனர். இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1,18,671 கன அடியாக வந்து கொண்டுள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 25,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை கடந்த 4 நாட்களில் 20 அடி உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் 50000 கன அடி முதல் 100000 கன அடி வரை எந்நேரத்திலும் திறந்துவிடப்படலாம் என்றும், திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கும் வரும் நீர் மொத்தமும் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்பட இருக்கிறது. சுமார் ஒரு லட்சம் கன அடிக்கும் மேலாக உபரி நீர் வெளியேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்படும் என்பால் காவிரிக் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், காவிரிக் கரையில் அமைந்துள்ள சேலம், திருச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறையினருக்கு மேட்டூர் அணையில் இருந்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்