தீவிரவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கடுமையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் - கே.பி.ராமலிங்கம்
பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக பதாகைகள் வைப்பதற்கு கூட தமிழகத்தில் காவல்துறை மிகுந்த கெடுபிடியுடன் நடந்து கொள்வதாக கே.பி.ராமலிங்கம் கூறினார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சேலம் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அப்பாவி சுற்றுலா பயணிகளை கொலை செய்த தீவிரவாதிகளை கண்டித்தும், இதற்கு காரணமாக பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் 68 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது தான் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. பஹல்காமில் உயிரிழந்த 26 பேரின் குடும்பத்தினரின் பின்னால் 140 கோடி இந்தியர்களும் துணை நிற்கிறார்கள். பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பேனர் வைப்பதற்கு கூட தமிழ்நாட்டில் காவல்துறை கெடுபிடி செய்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக தன்னுடைய கண்டனத்தை வெளிப்படையாக பதிவு செய்யாமல் உள்ளார். இது கண்டனத்துக்குரியது. அவருடைய கட்சிக்கு வேறுவிதமான நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனால் முதலமைச்சர் என்ற முறையில் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான கண்டனத்தை அவர் பதிவு செய்ய வேண்டும். தீவிரவாத தாக்குதல் நிகழ்ந்த பிறகு அரசின் நடவடிக்கைகளுக்கு துணை நிற்க வேண்டியது அனைத்து தலைவர்களின் கடமையாகும் என்று பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சேலம் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் சசிகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.





















