சேலம் மாவட்டத்தின் 174வது ஆட்சியராக பதவியேற்ற பிருந்தா தேவி...மகிழ்ச்சியில் பெண்கள்
சேலம் மாவட்டத்தின் முக்கிய உயர் பதவிகளில் மகளிரே இடம் பெற்றிருப்பது சேலம் மாவட்ட பெண்களிடம் பெரும் மகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கார்மேகத்தை மாற்றம் செய்து புதிய ஆட்சியராக தோட்டக்கலைத் துறை இயக்குனராக இருந்த பிருந்தா தேவியை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சேலம் மாவட்டத்தின் 174 வது மாவட்ட ஆட்சியராக பிருந்தா தேவி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் இரண்டாவது பெண் ஆட்சியர் என்ற பெருமையை பிருந்தா தேவி பெற்றுள்ளார். அவருக்கு அனைத்து துறை அரசு உயர் அதிகாரிகளும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும், குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில் மனுவின் மீது உரிய தீர்வு வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன்கள். பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலை வாய்ப்பு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் 412 மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியரக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென நடத்தப்பட்டு வரும் குறைதீர் முகாமில் உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 16 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், ஒரு பள்ளி மாணவருக்கு ரூ.1.05 லட்சம் மதிப்பிலான அதிநவீன பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.
சேலத்தில் மாவட்ட வருவாய் அலுவலராக மேனகா, சேலம் சரக டிஐஜியாக உமா, சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி, மாவட்ட கூடுதல் ஆட்சியராக அலர்மேல் மங்கை, உதவி ஆட்சியராக சுவாதி ஸ்ரீ, சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் பிருந்தா ஆகியோர் பணியாற்றி வரும் நிலையில் சேலம் மாவட்டத்தின் பெண் ஆட்சியராக பிருந்தா தேவி இன்று பொறுப்பேற்றுள்ளதால் மாவட்டத்தின் முக்கிய உயர் பதவிகளில் மகளிரே இடம் பெற்றிருப்பது சேலம் மாவட்ட பெண்களிடம் பெரும் மகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் மகளிரே மாவட்ட ஆட்சியராக உள்ளது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.