கண்ணுக்கு எட்டும் தூரத்தில் காவிரி இருந்தும் குடிநீருக்கு தவிக்கும் மக்கள்!
மேட்டூர் அணையில் இருந்து 20 கிலோ மீட்டரிலும், காவிரி ஆறு ஐந்து கிலோ மீட்டரிலும் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் அடப்புக்காடு.
சேலம் மாவட்டம் மேச்சேரி வட்டம் மல்லிகுந்தம் ஊராட்சிக்கு உட்பட்ட அடப்புக்காடு என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக தண்ணீர் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தின் முக்கிய அணையான மேட்டூர் அணையில் இருந்து 20 கிலோமீட்டரிலும், காவிரி ஆறு ஐந்து கிலோ மீட்டரிலும் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் அடப்புக்காடு. இக்கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இருப்பினும் இந்த கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதி என எவ்வித அடிப்படை வசதிகளும் அரசு சார்பில் இதுவரை செய்யப்படவில்லை. 30 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சித் தலைவரால் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் மின்சாரம் இல்லாததால் பழுதடைந்து கிடைக்கின்றது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது, ”100 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வாழ்ந்து வருகிறோம். இருப்பினும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே எங்களை சந்திக்க வருகின்றனர். இங்கு வரும் அனைத்து அதிகாரிகளிடமும் நாங்கள் கோரிக்கை மனுவை அளித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும் எந்த அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க மட்டுமே எங்கள் கிராமத்திற்கு அரசியல்வாதிகள் வருகிறார்கள். வெற்றி பெற்ற பிறகு உங்களது கிராமத்திற்கு தான் முதலில் அனைத்து வசதிகளை செய்தி தருவோம் என்று கூறிவிட்டு சென்றுவிடுவார்கள் அதன் பிறகு அடுத்த தேர்தலுக்கு தான் அவர்களை பார்த்து விட முடியும்.
இரண்டு குடம் தண்ணீர் எடுக்க 3 முதல் 5 கிலோமீட்டர் வரை கரடுகளின் நடந்து சென்று பக்கத்து கிராமத்தில் தண்ணீர் எடுத்து வந்து கொண்டிருந்தோம். கொரோனா காரணம் காட்டி அவர்கள் தற்போது எங்களுக்கு தண்ணீர் தருவதில்லை. இங்கு இருக்கும் இளைஞர்கள் அருகில் உள்ள மேச்சேரி மின்சார நிலையத்தில் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வருகின்றனர் ஆனால் உங்க கிராமத்திற்கு மின்சாரம் கிடையாது. கடந்த தேர்தலின்போது 4 லட்சம் உங்கள் கிராமத்திற்கு சாலை வசதி அமைக்க ஒதுக்கி உள்ளோம் என்று கூறினர். இதுவரை எங்களுக்கு எதுவுமே கிடைத்தது இல்லை, இந்த நிலை நீடித்தால் நாங்கள் அனைவரும் தூக்கிட்டு தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று கண்ணீருடன் கிராம மக்கள் கூறினர்.
அடப்புக்காடு கிராமத்திற்கு நேற்றைய முன்தினம் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று அங்கிருக்கும் குறைகளை கேட்டறிந்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களிடம் கூறியிருக்கிறார். இதுபோன்ற பல முறை பல மாவட்ட ஆட்சித்தலைவர்கள் வந்து சென்று விட்டார்கள், இருப்பினும் எங்களுக்கு விடிவு கிடைக்கவில்லை என்று கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் குடிநீர் குழாய், சாலை மற்றும் மின்சாரக் கம்பங்கள் அமைப்பதற்கு அனைத்து வசதிகளும் இருந்தும் இதுவரை அமைக்கப்படாதது ஏன்? என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து மல்லிகுந்தம் ஊராட்சி மன்றத்தலைவர் செல்லம்மாளிடம் கேட்டபோது, ”மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு அனுமதி கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
இந்தியா விண்வெளியில் பல சாதனைகள் நிகழ்த்தி, மனிதன் செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கு வழி இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்துவரும் நிலையில். அடுப்புக்காடு கிராமத்தைப் போன்று எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இன்னும் எத்தனையோ கிராமங்கள் அழிவை நோக்கி பயணித்துக் கொண்டுதான் உள்ளது.