Salem ADMK: அதிமுக மாவட்ட செயலாளர் அதிரடி மாற்றம்... சொந்த மாவட்டத்திற்கு இபிஎஸ் ஸ்கெட்ச்
2026 சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அதிமுக கள ஆய்வு குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில் வெங்கடாசலம் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் ஒரு சிலர் கூறுகின்றனர்.

சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளராக இருந்து வந்தவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம். இவர் கடந்த பத்து ஆண்டுகளாக சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்து வருகிறார். இவரை தற்போது அந்தப் பதவியில் இருந்து விடுவிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் ஆன சேலத்தில் மாவட்ட செயலாளர் விடுவிக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
மாவட்ட செயலாளர் அதிரடி மாற்றம்:
குறிப்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் விசுவாசமாக இருந்து வந்தவர். இவரை தற்போது மாற்றுவதற்கு எந்த வித தேவையும் இல்லாத நிலையில் இந்த திடீர் மாற்றம் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சேலம் மாநகர் மாவட்ட பணிகளை மேற்கொள்வதற்காக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.செல்வராஜ் மற்றும் ஏ.கே.எஸ்.எம்.பாலு ஆகியோர் நியமிக்கப்பட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கள ஆய்வு ரிப்போர்ட்:
கடந்த சில நாட்களாக அதிமுக மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த வெங்கடாசலம் மீது பல்வேறு புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அவர் மாநகர் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து பேசாமல் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது மட்டுமின்றி, 2026 சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அதிமுக கள ஆய்வு குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில் வெங்கடாசலம் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் ஒரு சிலர் கூறுகின்றனர்.
மாவட்ட செயலாளர்கள் மாற்ற வாய்ப்பு?
இது தொடர்பாக ஏற்கனவே அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், இதனால் சமீப காலமாக வெங்கடாஜலத்தை முன்னிறுத்தாமல், அதிமுக அமைப்பு செயலாளர் சிங்காரம் நியமித்து சேலம் அதிமுக மாநகர் நிர்வாகிகளின் செயல்பாட்டை கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் 2026 சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் மாவட்ட செயலாளர்கள் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும். இதில் இன்னும் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்:
ஆனால், தற்போது சேலம் மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த வெங்கடாசலம், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதால், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
2026 தேர்தல் டார்கெட்:
அதிமுக தற்போது உள்ளே சூழ்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுக கட்டாயம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் கட்சியில் அடிப்படை தொண்டராக உள்ள பல்வேறு நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கொடுக்க உள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றனர். குறிப்பாக, கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக முழுவதும் அதிமுக தோல்வி அடைந்தாலும், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 பகுதிகளில் 10 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 11 தொகுதிகளிலும் வெற்றி பெற்று சேலம் மாவட்டம் திமுக கோட்டை என மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி கூறி வருவதாக கூறப்படுகிறது.





















