Aavin Diwali Sale: சேலத்தில் ஆவின் நிறுவனத்தின் தீபாவளி விற்பனை கண்காட்சி தொடக்கம்... 3.7 கோடி ரூபாய் விற்பனை இலக்கு
94430 26950, 95787 65250, 96263 35536, 96296 23749 ஆகிய அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு காலை 8.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை தேவையான ஆர்டர்களை தெரிவிக்கலாம்.
நாடு முழுவதும் வெகு உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகையில் ஒன்று தீபாவளி. இந்த பண்டிகை முன்னிட்டு பல்வேறு இடங்களில் தனியார் நிறுவனங்களின் இனிப்பு கார வகைகள் விற்பனைக்கு வைக்கப்படும். இந்த நிலையில் ஆவின் நிறுவனம் சார்பில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி இனிப்பு கார வகைகள் தயாரித்து விற்பனை செய்யும் திட்டத்தை செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சேலம் ஆவின் நிறுவனத்தின் தீபாவளி விற்பனை கண்காட்சியினை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விற்பனையை தொடங்கி வைத்தார். முதல் விற்பனையை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பொதுமக்கள் இனிப்பு கார வகைகளை வாங்கிச் சென்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறுகையில், “சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தரம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பால் விற்பனையில் தமிழகத்தின் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி ஆவின் இனிப்பு வகைகள் விற்பனைக்கு கொடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆவின் பொதுமக்கள் மத்தியிலும், கூட்டுறவு நிறுவனங்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. தீபாவளி பண்டிகைக்கென ஆவினில் பால்கோவா, ஸ்பெஷல் மைசூர்பா, கேரட் மைசூர்பா, மில்க் சேக், முந்திரி கேக், நெய் லட்டு, மிக்சர், பாதாம் மிக்ஸ் பவுடர் விற்பனைக்கு தயாராக உள்ளது.
மேலும், பால் உபப்பொருட்களான வெண்ணெய், நெய், நறுமணப்பால், தயிர், மோர், பால்கோவா, மைசூர்பாகு, பாதம் மிக்ஸ் பவுடர், குலாப்ஜாமுன், ரசகுல்லா, சாக்லேட், ஐஸ்கிரீம் வகைகள் முதலான பால் பொருட்களையும் உயரிய தரத்தில் தேவையான சர்க்கரை அளவுடன் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் சுகாதாரமான முறையில் ஆவினின் அக்மார்க் தரம் பெற்ற நெய்யினால் தயாரிக்கப்பட்ட இனிப்புகளாகும். சுவைமிகுந்த இந்த இனிப்பு வகைகளை பொதுமக்கள் ஆவின் பார்லர்கள் மற்றும் ஆவின் சில்லரை விற்பனையாளர்களிடமிருந்து வாங்கி பயன்பெறலாம். இந்தாண்டு சேலம் ஆவின் மூலம் ரூ.3.7 கோடி அளவிற்கு தீபாவளி விற்பனைக்காக எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறினார்.
மேலும், 94430 26950, 95787 65250, 96263 35536, 96296 23749 ஆகிய அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு காலை 8.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை தேவையான ஆர்டர்களை தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.