Baby Kidnapped: சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல்
மருத்துவமனை வளாகத்தில் இருந்து முககவசம் அணிந்த பெண் ஒருவர் குழந்தையை கடத்தி செல்லும் புகைப்படம் மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கதுரை வெண்ணிலா தம்பதியினருக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மகப்பேறு சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வெண்ணிலாவிடம் பேச்சு கொடுத்தவாறு குழந்தையின் கண்கள் மஞ்சளாக இருப்பதாக கூறி கண் மருத்துவரை பார்க்க அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது பெற்றோரின் கவனத்தை திசை திருப்பி விட்டு அப்பெண் குழந்தையை கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலைய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மருத்துவமனை வளாகத்தில் இருந்து முககவசம் அணிந்த பெண் ஒருவர் குழந்தையை கடத்தி செல்லும் புகைப்படம் மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை விரைந்து மீட்க சேலம் மாநகர காவல்துறையினர் பிரதான சாலைகளில் வாகன சோதனையை தீவிர படுத்தியுள்ளனர். மேலும், சேலம் மாநகர காவல் துறை சார்பில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தினசரி 1000க்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை வளாகத்தில் பிறந்து ஐந்து நாட்களை ஆன ஆண் குழந்தை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், மாஸ்க் அணிந்த பெண்ணை பொதுமக்கள் கண்டறிந்தால் உடனடியாக சேலம் மாநகர காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க அவசர உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு - 9498100945, சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு வரை - 9498181218, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை காவல் நிலைய காவல் ஆய்வாளர் - 9442062981 என்ற எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

