ஏற்காட்டில் மலைப்பாதையில் விழுந்த 200 டன் ராட்சத பாறை வெடி வைத்து அகற்றம்
ஏற்காடு மலைப்பாதையில் அவ்வப்போது மண்சரிவு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையோடு பாதுகாப்பாக பயணிக்க சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது
சுற்றுலாதளமான ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. சேலத்திலிருந்து கொண்டப்பநாயக்கன்பட்டி வழியாக ஏற்காடு செல்லும் பிரதான சாலையில் கடந்த மாதத்தில் இரண்டுமுறை மண்சரிவு ஏற்பட்டது. மேலும், மற்றொரு பிரதான சாலையான குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் சாலையில் பெரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்றிரவு சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் பிரதான சாலையில் 40 அடி பாலம் அருகே சுமார் 200 டன் எடை கொண்ட ராட்சத பாறை ஒன்று சரிந்து விழுந்தது. சரிந்து விழுந்த பாறையை அகற்றும் பணியில் அதிகாலை முதல் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். பெரிய அளவிலான பாறை என்பதால் உடைத்து அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டதால் பாறையில் வெடி வைத்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் 30 இடங்களில் துளையிடப்பட்டு வெடிமருந்து நிரப்பி வெடிக்க செய்யப்பட்டது.
இதன் காரணமாக ஏற்காடு செல்லும் வாகனங்களுக்கு சுமார் 3 மணி நேரம் வரை தற்காலிமாக தடைவிதிக்கப்பட்டது. வெடித்து சிதறிய பாறை கற்களை பொக்லைன் வாகனம் மூலம் அகற்றும் பணியும் துரிதமாக நடைபெற்றது. தொடர்மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் அவ்வப்போது மண்சரிவு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையோடு பாதுகாப்பாக பயணிக்க சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 12 ஆம் தேதி இதேபோன்று இரண்டாம் கொண்டை ஊசி வளைவின் அருகில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக சேலம் - ஏற்காடு மலை பாதையில் வாகனங்கள் செல்லும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இதுபோன்று மண்சரிவு ஏற்படுவதால் ஏற்காட்டில் வாழும் மலைவாழ் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதே போன்று, சேலம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் கடந்த 4 ஆம் தேதி இரவு ஏற்காடு மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அவ்வழியே போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டு மண் சரிவை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டுள்ளனர். குப்பனூர் வழியாக செல்லும் வாகனங்கள் சேலம் - ஏற்காடு பிரதான சாலை வழியாக ஏற்காடு செல்ல அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஆறு நாட்களுக்கு பின்பு குப்பனூர் - ஏற்காடு வழியாக மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
காவல்துறையிடமே திருடிய பலே திருடர்கள் - ஆயுதப்படை மைதானத்தில் சந்தன மரங்கள் அபேஸ்