(Source: ECI/ABP News/ABP Majha)
ஜூன் 21ல் முதல் சட்டமன்ற கூட்டம்: ஆளுநர் உரையில் இடம் பெறும் முக்கிய அம்சங்கள்!
16ஆவது சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் வரும் ஜூன் 21ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சில முக்கிய கொள்கை முடிவுகளை அறுவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் 16 ஆவது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் வரும் ஜூன் மாதம் 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக நேற்று மாலை கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது தமிழகத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சரிடம் ஆளுநர் கேட்டறிந்ததார். இச்சந்திப்பு நடந்து முடிந்த சில மணி நேரத்தில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் சட்டபேரவை ஆளுநர் உரையுடன் கூட இருக்கும் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம், அதேபோல் புதிய அரசு அமைந்து கூடும் முதல் கூட்டத்தொடரிலேயே ஆளுநர் உரை இடம்பெறும். ஆளுநர் என்ன பேசப்போகிறார் என்பதை தமிழக அரசுதான் தயார் செய்து ஆளுநர் மாளிகைக்கு அனுப்பும், அந்த உரையைத்தான் சட்டப்பேரவை கூடும் நாள் அன்று சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து ஆளுநர் வாசிப்பார். ஆளுநர் உரையை பொறுத்தவரை அரசு தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் விதம், அரசின் கொள்கை முடிவுகள், திட்டங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு அரசை பாராட்டி பேசும் அறிக்கையாகவே ஆளுநர் உரை இருக்கும். ஆளுநர் உரை நடந்து முடிந்த பிறகு ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும், அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசிய பிறகு முதல்வர் ஆளுநர் உரையின் மீது தனது கருத்தை பதிவு செய்வார் இறுதியாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை நிறைவடையும்.
ஆளுநர் உரையில் கொரோனா இரண்டாம் அலை கால கட்டத்தில் புதியதாக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் செயல்பாடுகள், கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் நடவடிக்கை எடுத்த முதல்வரை பாராட்டும் வாசகமும் இடம்பெறலாம் என தெரிகிறது. கொரோனா கால கட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை சி.பி.எஸ்.இ மற்றும் மாநில அரசுகள் ரத்து செய்துள்ள நிலையில் நீட் தேர்வையும் ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவது தொடர்பான வாசகம் இடம்பெற வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவை தொடர்பாகவும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான வாசகங்களும் ஆளுநர் உரையில் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆளுநர் உரைக்கான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை கொண்டுவரும்போதே தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகத்தில் சட்ட மேலவை அமைப்பதற்கான தீர்மானமும் கொண்டு வரப்படும் என தெரிகிறது.