மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
கோவையை மீண்டும் கோட்டை விட்ட திமுக | கோவை மாவட்டத்தை வெல்ல முடியாததற்கு காரணங்கள் என்ன ?
தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை திமுக பெற்றிருந்தாலும், அதிமுக கோட்டை என கருதப்படும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்றில் கூட வெல்ல முடியாமல் தோல்வியை தழுவியிருக்கிறது. அதற்கான காரணங்களை ஆதங்கம் பொங்க பகிர்ந்து இருக்கிறார்கள் உடன்பிறப்புகள்
தமிழ்நாட்டில் திமுக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த போதும், கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. பத்து தொகுதிகளையும் கைப்பற்றி கோவை மாவட்டம் தங்களின் கோட்டை என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறது அதிமுக.
கொங்கு மண்டலத்தை மீண்டும் கோட்டைவிட்ட திமுக
கடந்த 1996 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றியது. அதற்கு பின்னர் நடந்த 4 தேர்தல்களிலும் பின்னடைவை சந்தித்த திமுக, தொடர்ந்து ஐந்தாவது முறையாக தற்போதும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த 2006 ம் ஆண்டு தேர்தலில் வென்று திமுக ஆட்சியமைத்த போதும் கூட கொங்கு மண்டலத்தில் திமுக ஒரு தொகுதியிலும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. 2016 ம் ஆண்டு வெற்றி பெற்ற சிங்காநல்லூர் தொகுதியையும் இம்முறை இழந்துள்ளது திமுக. 2001, 2011 சட்டமன்ற தேர்தல்களுக்குப் பிறகு 2021 தேர்தலிலும் திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
பத்து தொகுதிகளையும் கைப்பற்றிய அதிமுக
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் திமுக அபார வெற்றி பெற்றது. அந்த வெற்றிக் களிப்பில் இருந்த திமுக, சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றும் முனைப்போடு பணியாற்றியது. அதன் உச்சமாக கோவையில் தேர்தல் பரப்புரைகளின் போது திமுக தலைவர் ஸ்டாலின், ”கடந்த மக்களவைத் தேர்தலிலேயே அதிமுகவின் கோட்டையில் நாம் ஓட்டை போட்டு விட்டோம். இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் அதிமுகவை வாஷ் அவுட் செய்யப் போகிறோம்” என்றார். திமுக எதிர்பார்ப்புகளையும், கருத்துக் கணிப்பு முடிவுகளையும் தேர்தல் முடிவுகள் பொய்யாக்கியுள்ளன.
தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி 3 வது முறையாக வெற்றி பெற்று ’ஹாட்ரிக்’வெற்றியை பதிவு செய்துள்ளார். 41 ஆயிரத்து 630 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை அவர் தோற்கடித்துள்ளார். தேர்தல் களத்தில் தொடர்ந்து 4 வெற்றிகளை பெற்று, தோல்வியை சந்திக்காத நபராக விளங்குகிறார். பொள்ளாச்சி தொகுதியில் 1725 வாக்குகள் வித்தியாசத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து 5 முறையாக அவர் சட்டமன்றத்திற்கு தேர்வாகியுள்ளார். அதேபோல பொள்ளாச்சி தொகுதியில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக அதிமுக வெற்றி பெற்றுள்ளது. கிணத்துக்கடவு தொகுதியில் கடும் இழுபறிக்கு இடையே அதிமுக வேட்பாளர் செ.தாமோதரன் ஆயிரத்து 404 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது இத்தொகுதியில் அவர் பெறும் நான்காவது வெற்றி இது.
வால்பாறை தொகுதியில் அமுல் கந்தசாமி, சூலூர் தொகுதியில் கந்தசாமி, கோவை வடக்கு தொகுதியில் அம்மன் அர்ச்சுணன், கவுண்டம்பாளையம் தொகுதியில் பி.ஆர்.ஜி. அருண்குமார், மேட்டுப்பாளையம் தொகுதியில் ஏ.கே.செல்வராஜ், சிங்காநல்லூர் தொகுதியில் கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் வெற்றி பெற்றனர். கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன், வானதி சீனிவாசன் இடையே நடந்த போட்டியில், காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
மேற்கில் உதிக்காத சூரியன்
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 21 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக இருந்தார். இந்த 21 தொகுதிகளில் 16 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் பத்து தொகுதிகளிலும் திமுக தோல்வியடைந்தது. நீலகிரி மாவட்டத்தில் 2 தொகுதிகளை இழந்தாலும், திமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கூடலூர் தொகுதியை அதிமுக கைப்பற்றியுள்ளது. 8 தொகுதிகளை கொண்ட திருப்பூர் மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் ஈரோடு மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மேற்கு மாவட்டங்களில் பலம் இல்லாத திமுக, இம்முறையும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மற்ற பகுதிகளை காட்டிலும் அதிமுகவிற்கு கணிசமான தொகுதிகளை மேற்கு மாவட்ட மக்கள் வழங்கியுள்ளனர்.
தொடர் தோல்விக்கான காரணங்கள்
மேற்கு மாவட்டங்களில் திமுகவின் தொடர் தோல்விக்கான காரணங்கள் குறித்து திமுகவினரிடம் கேட்டபோது “கோவையில் திமுகவிற்கான முகம் என யாரும் இல்லை. செல்வாக்கு மிக்க தலைவர்கள் இல்லை. இந்த தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பணம், சாதி ஆகியவை பெரிய பங்காற்றியுள்ளது. அதேபோல், திமுக தோல்விக்கு முக்கிய காரணம் உட்கட்சி பூசல் தான். திமுகவினர் பலர் அதிமுகவிற்கு விசுவாசமாக பணியாற்றியுள்ளனர். கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோவை வடக்கு தொகுதிகளை இழக்க உட் கட்சி பூசலே காரணம். பத்து வருடங்களாக திமுக ஆட்சியில் இல்லை. இப்பகுதியில் திமுகவினருக்கும், மக்களுக்கும் இடையேயான நெருக்கம் குறைந்துள்ளது. மக்கள் பணி செய்வதில் திமுகவினரிடையே சுணக்கம் இருக்கிறது. அதிமுகவினர் மக்களோடு மக்களாக பழகி வருவது அவர்களுக்கு பலம் சேர்த்திருக்கிறது. மோடி எதிர்ப்பலையினால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வென்றது. இந்த தேர்தலில் ஸ்டாலினா அல்லது எடப்பாடி பழனிசாமியா என வரும் போது, இப்பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் கவுண்டர் சமூகத்தினர் தான் சார்ந்த சமூகத்தினர் வர வேண்டுமென்பதற்காக வாக்களித்துள்ளனர்” என விளக்கமாக தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
பொழுதுபோக்கு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion