Mamata Banerjee : சென்னைக்கு வருகை தரும் மம்தா பானர்ஜி.. யார் யாரை சந்திக்கிறார்? சூடுபிடிக்கும் அரசியல் களம்..
மேற்கு வங்கத்தின் பொறுப்பு ஆளுநராக இருக்கும் இல. கணேசன் குடும்ப விழாவில் பங்கேற்க மம்தா பானர்ஜி இன்று சென்னை வருகிறார்.
மேற்கு வங்கத்தின் பொறுப்பு ஆளுநராக இருக்கும் இல. கணேசன் குடும்ப விழாவில் பங்கேற்க மம்தா பானர்ஜி இன்று சென்னை வருகிறார்.
மம்தா பானர்ஜி ஜனவரி 5, 1955-ஆம் ஆண்டு கொல்கத்தாவின், அஸ்ரா பகுதியில் பிறந்தார். கொல்கத்தாவில் உள்ள பசந்தி தேவி கல்லூரியில் பட்டம் பெற்று ஜோகேஷ் சந்திர சௌதுரி சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.அவர் தமது அரசியல் வாழ்வை காங்கிரஸ் கட்சியில் 1970களில் துவங்கினார். உள்ளூர் காங்கிரஸில் படிப்படியாக முன்னேறி 1976 முதல் 1980 வரை மேற்கு வங்க மகளிர் காங்கிரஸின் பொது செயலாளராக விளங்கினார்.1984ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதுபெரும் மார்க்சிய அரசியல்வாதியான சோம்நாத் சாட்டர்ஜியை ஜாதவ்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வென்று இந்தியாவின் மிகச் சிறிய வயதில் நாடாளுமன்றம் சென்ற பெருமை பெற்றார். 1997ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து பிரிந்து அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார்.
2011 ஏப்ரல்/மே மாதங்களில் ஆறு கட்டங்களாக நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்று 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்டு வந்த இடதுசாரி முன்னணி அரசினை வீழ்த்தினார். இவரின் போராட்ட குணத்தை கண்டு பலரும் வங்கத்தின் பெண் புலி என குறிப்பிடுவார். வங்கத்தை தன் கட்டுக்குள் வைத்திருப்பவர். இதற்கு முன் இருந்த ஆளுநருடன் மோதல் போக்கு இருந்த நிலையில் தற்போது உள்ள ஆளுநர் இல. கணேசனிடம் மோதல் போக்கின்றி தொடர்கிறார்
மணிப்பூர், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் ஆளுநர் இல.கணேசனின் மூத்த சகோதரர் பிறந்தநாள், நவம்பர் 3-ஆம் தேதி (நாளை ) அவரது சென்னை இல்லத்தில் கொண்டாடப்படுகிறது. அதில் பங்கேற்க மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு இல.கணேசன் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று, சென்னையில் அந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பங்கேற்பார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
அவரது அழைப்பை ஏற்று இன்று சென்னைக்கு வருகை தரும் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தற்போதில் இருந்தே தயாராகி வருகின்றன. தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் பாஜகவுக்கு எதிராக, தேசிய அளவில் வலுவான மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வரும் மாநில முதலமைச்சர்களில் மம்தா பானர்ஜி குறிப்பிடத்தக்கவர். புதிய கல்விக் கொள்கை, நீட், இந்தி மொழி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழ்நாடு அரசும் மத்திய பாஜக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக உள்ள நிலையில், மம்தா பானர்ஜி தமிழ்நாடு வந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசவுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பாஜகவிற்கு எதிரான தீவிரமான நிலைப்பாட்டை மம்தா பானர்ஜி கொண்டிருந்தாலும் அதே அளவிற்கு காங்கிரஸ் கட்சிக்கும் அவர் எதிர்ப்பு காட்டுகிறார். இந்நிலையில், காங்கிரஸ் தலைமையை ஏற்றுக்கொண்டு அவர்களது தலைமையில் 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க மம்தா தயங்கினால், மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்ப்போம் என்றும் கூட்டணிக்கு தலைமையாக யாரும் இல்லாமல் ஒருங்கிணைக்க ஒரு குழுவை நியமித்து ஒரே குடையின் கீழ் பாஜகவை எதிர்த்து போட்டியிடலாம் என்ற உத்தியை ஸ்டாலின் மம்தாவிடம் தெரிவித்து சம்மதம் வாங்க முயற்சிப்பார் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான மேற்கு வங்க முதல்வர் மமதாவின் சந்திப்பிற்கு பிறகு இந்திய அரசியலில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் மம்தா பானர்ஜியின் மனதில் ஏற்படும் மாற்றம் 2024 தேர்தல் கூட்டணி கணக்குகளுக்கு அடித்தளம் அமைக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.