‛அன்புமணி மீது நடவடிக்கை எடுங்க...’ விசிக சார்பில் புகார் மனு!
‛அன்புமணி ராமதாசு, மனோஜ் மற்றும் சித்தமல்லி பழனிச்சாமி ஆகியோர் மீது தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ - விக்ரமன்
ஜெய்பீம் விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா மற்றும் படக்குழு மீது பாமகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில இணை செய்தித்தொடர்பாளர் விக்ரமன், காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபுவிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அன்புமணி உள்ளிட்ட சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்த பாமக நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
,இதோ அவர் அளித்த மனுவில் உள்ளது அப்படியே...
வணக்கம். கடந்த 02.11.2021 அன்று நடிகர் சூர்யாவின் தாயாரிப்பு நிறுவனமான 2D நிறுவனம் தயாரித்து சூர்யா நடித்த 'ஜெய் பீம்' படம் அமேசான் பிரைம் எனும் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, வெளியாகி அனைத்து தரப்பு மக்களின் கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் கவனத்தையும் ஈர்த்தது மட்டுமல்லாமல் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஜெய் பீம் பட்டம் வன்னிய சமுதாயத்தை வன்முறையாளர்களாக காட்சிப்படுத்தியதாகக் கூறி கடந்த 10.11.2021 அன்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் திரு, அன்புமணி ராமதாசு அவர்கள் நடிகர் சூர்யா அவர்களுக்கு ஒன்பது வினாக்களுடன் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தின் இறுதியில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
'படைப்பாளிகளை விட அவர்களுக்கு வாழ்க்கை அளிக்கும் ரசிகர்கள்தான் பெரியவர்கள். இந்தப் படத்தில் நீங்கள் உங்களின் வன்மத்தைக் காட்டினால், அடுத்து உங்களின் திரைப்படம் வெளியாகும்போது அவர்கள் தங்களின் கோபத்தைக் காட்டக்கூடும். இவை எதுவுமே தேவையில்லை.
இதன் மூலம் திரு. அன்புமணி ராமதாசு தன் கட்சி தொண்டர்களை சூர்யாவுக்கு எதிராக வன்முறைக்கு தூண்டிவிட்டுள்ளார். மேலும் பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை குலைப்பதாகும். இது இந்திய தண்டனைச் சட்டம் 153அ மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் கிரிமினல் குற்றமாகும் என்பதை சுட்டிக்காட்ட விழைகிறேன்.
திரு. அன்புமணி அவர்களின் அறிக்கையைத் தொடர்ந்து கடந்த 12.11.2021 அன்று வன்னிய சங்கத்தின் முன்னாள் தலைவர் மறைந்த காடுவெட்டி குரு அவர்களின் மருமகன் திரு. மனோஜ் என்பவர் நடிகர் சூர்யா அவர்களின் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளை கொளுத்துவோம். நடிகர் சூர்யா அவர்கள் இனி உயிருடன் நடமாட முடியாது என பகிரங்கமாக கலாட்டா உள்ளிட்ட சில யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்துள்ளார்.
மேலும் கடந்த 14.11.2021 அன்று பாட்டாளி மக்கள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் திரு. சித்தமல்லி பழனிச்சாமி என்பவர் நடிகர் சூர்யா அவர்களை எட்டி உதைப்பவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் சன்மானம் தருவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். இது பிரபல நாளிதழ்களில் வெளியாகியுள்ளது.
எனவே திரு. அன்புமணி ராமதாசு, திரு. மனோஜ் மற்றும் திரு. சித்தமல்லி பழனிச்சாமி ஆகியோர் மீது தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.