நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அம்பேத்கர் சுடர் விருது! "எளிய மக்களின் குரல்" திருமாவளவன் புகழாரம்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அம்பேத்கர் சுடர் விருதை நடிகர் பிரகாஷ் ராஜூக்கு திருமாவளவன் வழங்கினார்.
தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்று விடுதலை சிறுத்தைகள். வி.சி.க. சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் மிகவும் முக்கியமான விருதாக கருதப்படுவது அம்பேத்கர் சுடர் விருது.
பிரகாஷ் ராஜூக்கு அம்பேத்கர் சுடர் விருது:
இந்த நிலையில், நடப்பாண்டிற்கான விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில், விசிக-வின் உயரிய விருதாக கருதப்படும் அம்பேத்கர் சுடர் விருது பிரபல நடிகர் பிரகாஷ்ராஜூக்கு வழங்கப்பட்டது. நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பிரபல நடிகராகவே திகழ்கிறார்.
தென்னிந்தியாவின் மிகவும் முக்கியமான நடிகராக உலா வரும் பிரகாஷ்ராஜ் கடந்த சில ஆண்டுகளாகவே பிரதமர் மோடியையும், பா.ஜ.க.வையும் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். மத்தியில் மோடி அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த சூழலில், வி.சி.க.வின் அம்பேத்கர் சுடர் விருது பிரகாஷ் ராஜூக்கு வழங்கப்பட்டுள்ளது.
திருமாவளவன் புகழாரம்:
விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் பற்றி பேசிய திருமாவளவன், அம்பேத்கர் சுடர் விருது வாங்கும் நடிகர் பிரகாஷ்ராஜ் எளிய மக்களின் குரலாக இருந்து வருகிறார். ஏராளமான அறப்பணிகளை செய்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜூக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்குவதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பெருமை கொள்கிறது என்று பிரகாஷ் ராஜூக்கு புகழாரம் சூடினார்.
வில்லன் கதாபாத்திரம் மட்டுமின்றி குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியவர். பிரதமர் மோடியை மிக கடுமையாக பல முறை விளாசியுள்ளார். நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முகத் தன்மை கொண்டவர். 1988ம் ஆண்டு முதல் நடித்து வரும் பிரகாஷ்ராஜ் ரஜினி, கமல், விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.
பா.ஜ.க. மீது தொடர் விமர்சனம்:
கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை மிக கடுமையாக விமர்சித்து வந்த பிரகாஷ்ராஜ் மத்திய பெங்களூர் தொகுதியில் போட்டியிட்டார். சுயேட்சையாக போட்டியிட்ட அவர் அந்த தேர்தலில் மொத்தம் 28 ஆயிரத்து 906 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். ஆனாலும், பா.ஜ.க. மீதான தனது விமர்சனத்தை அவர் தொடர்ந்து வைத்துக் கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.