'பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு திமுகவில் எப்போது ஒழிக்கப்படும்?' - வானதி சீனிவாசன் கேள்வி
"சமூக நீதி, சமத்துவத்தை கொன்றுவிட்டு மற்றவர்களுக்கு பாடம் எடுப்பதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும். திமுகவின் இந்து மத வெறுப்பு ஊரறிந்த உண்மை. அதை இனி மறைத்து ஏமாற்ற முடியாது”
பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “செப்டம்பர் 2ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய அமைப்பு நடத்திய மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணிச் செயலாளரும், மாநில அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், "கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்" என பேசினார். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களே அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால், நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. ஜாதி வேறுபாடுகளைதான் ஒழிக்க வேண்டும் என கூறினேன் என இப்போது விளக்கம் அளித்து வருகின்றனர்.
இந்தச்சூழலில் மகனுக்கு வக்காலத்து வாங்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "உதயநிதி பேசியதை பாஜக ஆதரவு சக்திகள் திரித்து, சனாதன எண்ணம் கொண்டவர்களை இனப்படுகொலை செய்ய சொன்னார் என்று பரப்பி வருகிறார்கள். நான் அப்படி பேசவில்லை என்று உதயநிதி மறுத்த பிறகும், பிரதமரே சனாதனத்தை பற்றி தவறாகப் பேசினால் பதிலடி கொடுக்க வேண்டும் என பேசியதாக செய்திகள் வெளியிட்டுள்ளன. ஒரு செய்தி உண்மையா, பொய்யா என்பதை அறியாமல், சனாதன போர்வையை போர்த்திக் கொண்டு பிரதமர் குளிர்காய நினைக்கிறார்" என்றெல்லாம் தன் மனம்போன போக்கில் அறிக்கை விட்டிருக்கிறார்.
செப்டம்பர் 2ம் தேதி நடந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதியோடு கலந்து கொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பலரும், சனாதனம்தான் இந்து மதம் என்று திரும்பதிரும்ப பேசியுள்ளனர். அதையெல்லாம் கேட்ட பிறகுதான் சனாதனத்தை கொசு, டெங்கு, கொரோனாவோடு ஒப்பிட்டு உதயநிதி பேசியுள்ளார். அவர் குறிப்பிட்ட நோய்களில் எல்லாம் கொத்து காொத்தாக மக்கள் செத்து மடிந்தார்கள். எனவே, சனாதனத்தை ஒழிப்போம் என்றால் சனாதன தர்மம் அதாவது இந்து மதத்தை பின்பற்றுபவர்களை அழிக்க வேண்டும் என்றும்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதைதான் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்தார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது. இந்து மதத்தை அழித்து ஒழிக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசி வரும் திராவிடர் கழகத்தின் அரசியலமைப்புதான் திமுக.
அனைத்து மக்களுக்குமான முதலமைச்சராக இருந்தும் இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்லாதவர்தான் மு.க.ஸ்டாலின். ஒரு வாழ்த்துகூட சொல்ல முடியாத அளவுக்கு மனதில் இந்து மத வெறுப்பை பூட்டி வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டணி கட்சிகளே கொந்தளித்த ஆரம்பித்த பிறகு, எல்லோருக்கும் சமமானவர் போல நடிக்க ஆரம்பித்துள்ளார். பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வையும், பெண்ணடிமைத்தனத்தையும் நியாயப்படுத்தும் சிந்தனைகளைதான் ஒழிக்க வேண்டும் என உதயநிதி பேசினார் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். முதலமைச்சருக்கு மனசாட்சி இருக்குமானால், பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வை முதலில் திமுகவில் ஒழிக்க வேண்டும். கருணாநிதி மகன் என்ற பிறப்பின் அடிப்படையில் திமுக தலைவராக, முதலமைச்சரானவர்தான் ஸ்டாலின். உதயநிதியும் அப்படித்தான். திமுக தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் வர முடியுமா? முதலமைச்சர் பதவியை பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விட்டுக் கொடுத்து சமூக நீதி, சமத்துவத்தைப் பாதுகாக்க ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா?
தனி தொகுதியாக இருக்கும்வரை பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வந்த திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவை, பெரம்பலூர் பொது தொகுதியானதும் நீலகிரி தொகுதிக்கு அனுப்பியது திமுக. முதலமைச்சரையும் சேர்த்து 35 பேரைக் கொண்ட திமுக அமைச்சரவையில் கடைசி இரண்டு இடங்களில் அதாவது 34வது, 35வது இடத்தில் இருப்பவர்கள் அமைச்சர்கள் மதிவேந்தன். கயல்விழி. இருவரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்குப் பிறகு அமைச்சர்களாக பதவியேற்ற உதயநிதிக்கு 10வது இடமும், கடைசியாக அமைச்சரான டி.ஆர்.பி.ராஜாவுக்கு 33வது இடமும் அளிக்கப்பட்டுள்ளது. இப்படி சமூக நீதி, சமத்துவத்தை கொன்றுவிட்டு மற்றவர்களுக்கு பாடம் எடுப்பதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும். திமுகவின் இந்து மத வெறுப்பு ஊரறிந்த உண்மை. அதை இனி மறைத்து ஏமாற்ற முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.