உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா - திருவாரூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
’’திருவாரூர் கொரடாச்சேரி, கோட்டூர், மன்னார்குடி, நீடாமங்கலம், நன்னிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுக இளைஞரணியினர் கொண்டாட்டம்’’
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திமுகவினர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் திமுகவினர் என்னுடைய பிறந்த நாளில் பேனர் வைக்கவோ ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டாம் அதனை பொது மக்கள் பயனடையும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனை ஒட்டி திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று திமுகவினர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை கொண்டாடி வருகின்றனர். இதுநாள் வரை நடிகர் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் சார்பில் அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வந்த நிலையில், முதன்முதலாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் தேர்வாகி உள்ளதை அடுத்து திமுகவினர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர்.
அதனை முன்னிட்டு திருவாரூர் ஒன்றியம் கருப்பூர் கிராமத்தில் திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எழில் ஏற்பாட்டில் ஒன்றிய குழு தலைவர் தேவா மற்றும் திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரஜினி சின்னா உள்ளிட்டோர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் பொருந்திய கேக்கை வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதன்பின்னர் குழந்தைகளுக்கு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு தென்னங்கன்று வீட்டிற்கு தேவையான பொருட்கள் புடவை, வேட்டி உள்ளிட்ட பொருட்களை நிவாரணமாக வழங்கினர்.
இதேபோன்று குன்னியூர் கிராமத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏராளமான நலத்திட்ட உதவிகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் திருவாரூர் திமுக நகர கழக வளாகத்தில் நகர செயலாளர் பிரகாஷ் தலைமையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அரிசி காய்கறி உள்ளிட்ட பொருட்கள் நிவாரணமாக மக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் திருவாரூர் கொரடாச்சேரி கோட்டூர் மன்னார்குடி நீடாமங்கலம் நன்னிலம் ஆண்டிபந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு திருத்துறைப்பூண்டி திமுக நகர செயலாளர் பாண்டியன் தங்க மோதிரங்கள் பரிசாக வழங்கி தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச் சத்துப் பொருட்களை நிவாரணமாக வழங்கினார்.