விஜய் மக்கள் சந்திப்பு: காஞ்சிபுரத்தில் நாளை நடைபெறும் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அனுமதி மறுப்பு! பரபரப்பு அறிக்கை வெளியீடு!
"காஞ்சிபுரம் அருகே நாளை விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது"

நாளை நடைபெறும் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் அனுமதி இல்லாதவர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார்
தமிழக வெற்றி கழகம் விஜய்
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் தொடங்கி நடத்தி வருகிறார். திரை பிரபலமாக இருந்து விஜய் கட்சியை தொடங்கியதால், இளைஞர்கள் மத்தியில் இக்கட்சிக்கு வரவேற்பு ஆரம்பத்திலிருந்து அதிகமாக இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வந்தார். சனிக்கிழமை தோறும் ஒவ்வொரு மாவட்டமாக பொதுமக்களை சந்தித்து வந்திருந்தார். திருச்சியில் தொடங்கிய அவரது சந்திப்பு நிகழ்ச்சிக்கு, ரசிகர் மத்தியில் அதிகளவு வரவேற்பு இருந்தது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்
அதன் ஒரு பகுதியாக கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி மாலையில் நடந்த கூட்டத்தில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில் அங்கு அவசர அவசரமாக பேசிவிட்டுப் புறப்பட்ட விஜய், விமானம் மூலம் திருச்சியில் இருந்து சென்னை வந்தடைந்தார். இந்தக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பாக சி.பி.ஐ., தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றது. கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், விஜய் கரூர் சென்று சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை எனக்கூறி, மாமல்லபுரத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை அழைத்து விஜய் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
அதன் பிறகு தமிழக வெற்றி கழகத்தின் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய் தலைமையிலான கூட்டணி அமையும் என, அதிமுக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதன் பிறகு கட்சியின் பணிகள் வேகம் எடுத்தன, குறிப்பாக தொண்டரணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, தொண்டர் பணி நிர்வாகிகளுக்கு சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து சேலத்தில் திறந்தவெளி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள விஜய் அனுமதி கேட்டு இருந்த தகவல் வெளியாகியிருந்தது. இந்தநிலையில் சேலத்திற்கு முன்பாக காஞ்சிபுரத்தில், விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் உள்ளரங்கு கூட்டமாக நடைபெற உள்ளது. நாளை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு மக்களுடன் கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளரங்க கூட்டம் என்பதால் முன் அனுமதி அளிக்கப்பட்ட 2000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியினருக்கு அனுமதி மறுப்பு
இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (23.11.2025) ஞாயிற்றுக்கிழமை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2000 பேர் மட்டுமே இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கழகத் தோழர்களும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






















