TVK Flag: நாளை முதல் கொடி பறக்கும்; தமிழ்நாடு இனி சிறக்கும்- த.வெ.க தலைவர் விஜய் முக்கிய அறிவிப்பு
TVK Vijay Flag: இறைவனும் இயற்கையும் அமைத்து கொடுத்த நாளான நாளை, நமது வீரக்கொடியை, கழகப் பாடலை வெளியிடுகிறோம் என்பதை பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன் என த.வெ.க தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும் என்றும் தமிழ்நாடு இனி சிறக்கும் என்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அரசியலில் தீவிரம் காட்டும் விஜய்:
தமிழ்நாட்டில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தை தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார். இதற்காக , அவர் சற்று தீவிரம் காட்டி வருவதை செயல்களால் பார்க்க முடிகிறது. குறிப்பாக, தவெக கட்சி சார்பாக மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்வதற்காக வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியினை தொடங்கியதையடுத்து, மாவட்டம், வட்டம், பகுதி, ஊராட்சி, ஒன்றியம், நகராட்சி, பேரூராட்சி போன்று அனைத்து இடங்களிலும் நிர்வாகிகளை நியமனம் செய்து கட்சி பணியை தீவிரப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும், தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகத்தை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
த.வெ.க கொடி - பாடல்
இந்த தருணத்தில், நாளை கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட உள்ளதாக விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள்.
தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி கழகக் கொடியை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன்.நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும், வெற்றி நிச்சயம் என குறிப்பிட்டுள்ளார்.