TVK VIJAY: சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி.? முதலமைச்சர் வேட்பாளர் யார்.? தவெக பொதுக்குழுவில் பரபரப்பு தீர்மானம்
TVK VIJAY : முதலமைச்சர் வேட்பாளராக விஜய்யை முன்னிறுத்தியும், கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தைக் விஜய்க்கு வழங்கியும் தவெக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசியல் களத்தில் விஜய்
தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இரண்டு மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். அடுத்தாக மக்களை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு செல்ல திட்டமிட்டார். இதன் படி திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரத்தை முடித்த விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு சென்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ஒரு மாத காலம் அமைதி காத்து வந்த விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களை சென்னைக்கு அழைத்து ஆறுதல் தெரிவித்தார்.
தவெக பொதுக்குழு கூட்டம்
இந்த நிலையில் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அடுத்த கட்ட திட்டம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக விஜய் தலைமையில் தவெக பொதுக்குழு கூட்டம் இன்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்கியதும் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் தலைமையில் 2026 தேர்தலை சந்திப்பது என்றும்,கூட்டணி நிலைப்பாட்டில் முழு அதிகாரம் எடுப்பதற்கு கட்சி தலைவருக்கு மட்டுமே உள்ளது என்று பொதுக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தவெக தீர்மானங்கள் என்ன.?
தீர்மானம் 1: கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த உறவுகளுக்கு இரங்கல்
தீர்மானம2 : பெண்கள் பாதுகாப்புத் தீர்மானம்
தீர்மானம் 3: தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்கள் கைதைக் கண்டிக்கும் தீர்மானம்
தீர்மானம் 4: தமிழ்நாட்டில் வாக்காளர்களின் ஜனநாயகக் கடமையான வாக்குரிமையைப் பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை நிறுத்தக் கோரும் தீர்மானம்
தீர்மானம் 5: டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடம் உரிய நேரத்தில், கொள்முதல் செய்யாமல் நெல் உள்ளிட்ட தானியங்கள் மழையில் நனைந்து, மூட்டையிலேயே முளைத்து வீணாகும் நிலைக்குக் காரணமான, விவசாயிகள் விரோத ஆட்சியாளர்களுக்குக் கண்டனம்.
தீர்மானம் 6: வடகிழக்குப் பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருப்பதால், தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும், மழைநீர் வடிகால்களைச் சீரமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே செய்து முடிக்க வேண்டும்.
தீர்மானம் 7: பாதுகாக்கப்பட்ட ராம்சர் சதுப்பு நிலத்தில் கட்டுமானம் கட்டத் தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தித் தீர்மானம்
தீர்மானம் 8: மக்கள் சந்திப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கழகத் தலைவருக்கும் அவரைக் காண வரும் பொதுமக்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் தமிழக அரசு, முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தீர்மானம் 9: கழகத்தின் மீதும் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அவதூறுகளைப் பரப்பும் ஆளுங்கட்சியின் கைக்கூலிகளாகச் செயல்படுபவர்களுக்குக் கண்டனம்.
தீர்மானம் 10: தமிழகத் தொழில் துறைக்கு வந்திருக்கும் முதலீடுகள், அவற்றின் மூலம் உருவான வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தீர்மானம் 11: தமிழ்நாட்டில் ஜனநாயக அடிப்படையில் பொதுப் பிரச்சனைகளில் கருத்துத் தெரிவிப்பவர்களைக் கைது செய்து, அவர்களின் கருத்துரிமையைச் சிதைக்கும் வெற்று விளம்பர மாடல் அரசுக்குக் கண்டனம்.
தீர்மானம் 12: கூட்டணி நிலைப்பாட்டில் தலைவருக்கு முழு அதிகாரம் வழங்கும் தீர்மானம்
தமிழகம் முழுவதும் கோடானு கோடி மக்களின் பேராதரவைப் பெற்று, முதன்மைச் சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் நம் வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில், 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பது என்றும், தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தைக் கழகத் தலைவர் அவர்களுக்கே வழங்கி, இச்சிறப்புப் பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது என தவெக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.





















