PMK Election Result : ‘கடலூர் முதல் கன்னியாகுமரி வரை கால் பதித்த பாமக’ உள்ளாட்சி தேர்தல் வெற்றியால் தொண்டர்கள் உற்சாகம்..!
ஒ.பன்னீர்செல்வத்தின் சொந்த நகராட்சியான பெரியகுளம் 23வார்டில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளது அதிமுகவினருக்கு அதிர்ச்சியையும் பாமகவிற்கு மகிழ்ச்சியையும் தந்துள்ளது.
வடமாவட்டத்தை தாண்டினால் பாமக கொடியை எங்கேயும் பார்க்க முடியாது என்ற வார்த்தை விமர்சனத்திற்கு தன் வெற்றி மூலம் பதிலடி கொடுத்திருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் 126 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாமகவால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என அறிவித்தது. தனித்து போட்டியிட்டு தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டும், அதிமுகவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்று களமிறங்கிய பாமக, அதற்காக பல்வேறு இடங்களில் திண்ணை பிரச்சாரம் செய்யவேண்டும், செல்போன் செயலிகளை பயன்படுத்த வேண்டும், சமூக வலைதளத்தை உபயோகிக்க வேண்டும் என்று வார்த்தைக்கு வார்த்தை தான் செல்லும் கூட்டங்களில் எல்லாம் சொன்னார் நிறுவனர் மருத்துவர் இராமதாசு.
தேதிமுக, சமத்துவ மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் வேட்பாளர்களை போட திணறியபோது, வெற்றியோ, தோல்வியோ வேட்பாளர்களை இறக்க வேண்டும் என்பதில் மும்முரம் காட்டியது பாமக. அதன்படி சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை வேட்பாளர்களை போட்டியிட வைத்தது.
அதனால், கடலூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாநகராட்சிகள், ஐந்து நகராட்சிகள், 48 பேரூராட்சிகள், 73 வர்டுகள் என மொத்தம் 126 இடங்களில் வெற்றி பெற்று காட்டியிருக்கிறது பாமக. தெரு தெருவாக, வார்டு வார்டாக அன்புமணி ராமதாஸ் இறங்கி பிரச்சாரம் செய்ததும், தான் மீண்டும் எம்.பி ஆனால் மதுக்கடைகளை எல்லாம் மூடிவிடுவேன் என்று பயந்து தருமபுரியில் 10ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை என்று பேசி பரப்புரை செய்ததும் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
அதேபோல், டீக்கடை, ஆட்டோ ஸ்டாண்ட் என அவர் செல்லும் இடமெல்லாம் எங்களுக்கு வாக்களித்தால் கல்வி தரத்தை உயர்த்துவோம், உங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து,உயரிய நிலைக்கு கொண்டுவருவோம் என எதார்த்தமாக பேசியதும் இந்த தேர்தலில் எடுப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் வேட்பாளர்களை போட்டியிட வைத்து, சென்னைக்கு என்றே தனி தேர்தல் அறிக்கையை வெளியிட வைத்தது, பிற அரசியல் கட்சிகளையும் கவனிக்க வைத்தது. சென்னையில் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லையென்றாலும் கூட பெரும்பாலான வார்டுகளில் கணிசமான வாக்குகளை பாட்டாளி மக்கள் கட்சி பெற்றுள்ளது.
கடலூர், வேலூர், ஓசூர் மாநகராட்சிகளில் தலா ஒரு வார்டிலும், காஞ்சிபுரத்தில் இரண்டு வார்டுகளிலும் பாமக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக, திருக்கழுகுன்றம் பேரூராட்சியின் ஆதிராவிடர் பெண் வார்டான 18ல் பாஅமக வேட்பாளர் ரேணுகா வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் உஷா 374 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்திருக்கிறார்.
அதேபோல், திண்டிவனம், விழுப்புரம், ஜெயங்கொண்டம், சிதம்பரம், விருத்தாசலம், சத்தியமங்கலம், நெல்லிக்குப்பம், தாராமங்கலம் உள்ளிட்ட பல்வேறு நகராட்சிகளில் போட்டியிட்ட பாமக வேட்பாளர்கள் மொத்தம் 48 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம் மாவட்ட பேரூராட்சிகளில் 73 வார்டுகளில் பாமக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளது அந்த கட்சி தலைமையை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக வட மாவட்டங்களில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை பிடித்துள்ளது. இதுமட்டுமின்றி முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வத்தின் சொந்த நகராட்சியான பெரியகுளம் 23வார்டில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளது அதிமுகவினருக்கு அதிர்ச்சியையும் பாமகவிற்கு மகிழ்ச்சியையும் தந்துள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ள பாமக பிற கட்சிகளையும் இதன்மூலம் திரும்பி பார்க்கவைத்துள்ளது.
இது குறித்து அறிக்கை கொடுத்துள்ள பாமக நிறுவனர் ராமதாசு, பண மழை அதிகார அடக்கு முறையை மீறி கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை பாமக பெற்றுள்ள வெற்றி மகத்தானது என்றும், வரும் தேர்தல்களில் வெற்றிகளை குவிக்க உத்திகளை வகுத்து பாமக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வெற்றி மூலம் பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத பெரும் சக்தியாக மாறியிருக்கிறது. 2024 நாடாளுமன்ற தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி வகுக்கும் உத்திகளும் எடுக்கும் நிலைபாடுகளுமே வருங்கால எதிர்காலம் பாமகவிற்கு எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கும்.