Exclusive : “அதிமுக, தவெகவை பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி?” ஜி.கே.வாசன் பிரத்யேக பேட்டி..!
”கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே பாஜக - அதிமுக கூட்டணி தொடர வேண்டும் என்று பல்வேறு கட்ட முயற்சிகளை ஜி.கே.வாசன் எடுத்தது குறிப்பிடத்தக்கது”
வரும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகாலம் இருக்கும் சூழலில் இப்போதே தமிழகத்தில் தேர்தல் களம் சூடுப்பிடிக்க தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் எல்லாம் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு முன்கூட்டியே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். குறிப்பாக, ஆட்சியில் இருக்கும் திமுக தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து கள பணிகளை தொடங்கிவிட்டது. அதிமுகவும் தன் பங்கிற்கு வட்டம், மாவட்டம் வாரியாக ஆய்வு செய்ய தனிக் குழுவை அமைத்துள்ளது. இந்நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் கண்டனது. ஆனால், அனைத்து தொகுதிகளிலும் அவர்களுக்கும் பாஜகவினருக்கும் தோல்வியே மிஞ்சியது. திமுக கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
திமுக-விற்கு எதிராக பிரம்மாண்ட கூட்டணி ?
இந்நிலையில், திமுகவிற்கு எதிராக பிரம்மாண்ட கூட்டணியை அமைக்க ஒரு அரசியல் கட்சித் தலைவர் முயற்சி எடுத்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியானது. திமுக, திராவிட மாடல் என்ற பெயரில் ஆட்சியை நடத்தி வரும் நிலையில், திமுகவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால் தனித் தனியாக போட்டியிட்டால் அது திமுகவிற்கு சாதகமாகவே ஆகிப்போகும் வரும் சட்டமன்றத் தேர்தலில் பலமான வெற்றிக் கூட்டணியோடு இருக்கின்றன திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால் இன்னொரு பலம் பொருந்திய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று அந்த தலைவர் நினைப்பதாகவும் அதற்கான முன்னெடுப்புகளை அவர் மேற்கொண்டுள்ளதாகவும் சில கட்சிகளில் இருந்து தகவல் பரப்பப்பட்டது.
அந்த தலைவர் வேறு யாரும் இல்லை ; த.மா.கா தலைவர் வாசன்தான் !
இந்நிலையில், இப்படியான ஒரு பெரிய முன்னெடுப்பை எந்த தலைவர் முன்னெடுக்கிறார் என்று விசாரித்தப்போது அவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனாகதான் இருப்பார் என்ற தகவல்கள் கிடைத்தன. ஏனென்றால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட அதிமுக – பாஜக – தேமுதிக – பாமக ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தவர் அவர். பல கட்டங்களாக பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோரையும் சந்தி அவர்களின் தூதுவர் போன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து பாஜகவுடன் கூட்டணியை தொடர அறிவுறுத்தினார். ஆனால், அவர் எடுத்த முயற்சிகள் அப்போது பலிக்கவில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லையென்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்ததால், ஜி.கே.வாசனின் முன்னெடுப்பு அப்போது தோல்வியில் முடிந்தது.
மீண்டும் பிரம்மாண்ட கூட்டணியா ? ஜி.கே.வாசன் பதில்!
இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் அசுர பலத்துடன் ஆளுங்கட்சியாக பலமான கூட்டணியுடன் இருக்கும் திமுக-வை எதிர்க்க அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, விஜயின் த.வெ.க உள்ளிட்ட கட்சிகளை ஒன்றிணைத்து மற்றொரு பிரம்மாண்ட கூட்டணியை உருவாக்கினால்தான், திமுகவை எதிர்க்க முடியும் என்ற கள சூழல் நிலவுவதால், அப்படியான இன்னொரு முயற்சியை இப்போதே ஜி.கே.வாசன் எடுக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியானது.
இது உண்மைதானா ? என்று அறிவதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.ஜி.கே.வாசனையே தொடர்புகொண்டு கேட்டோம். அதற்கு அவர் “இது ஒரு வதந்தி. இந்த மாதிரி கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் எதையும் நான் மேற்கொள்ளவில்லை. என்னுடைய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் செல்வதற்கான உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். அதோடு, தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கும் நிலையில், இப்போது இதுபோன்ற பேச்சு எழுவதே உசிதமானது அல்ல என நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அதிமுக, த.வெ.க ஆகிய கட்சிகளை பாஜகவுடன் கூட்டணியில் சேர்க்கும் எந்த முயற்சியையும் அவர் மேற்கொள்ளவில்லை என்று அதிகாரப்பூர்வமாக நமக்கு தெரிவித்துள்ளார்.